Breaking News
recent

கார்கோ - சிறுகதை [ துபாயில் நிகழ்ந்த சோகம் !]


வனிக்கவும்: இது சிறுகதை வடிவிற்காக கற்பனை கலந்த உண்மைச் சம்பவம்

துபாயில் சற்று நல்ல சம்பளத்தில் பணிபுரியும் எனது நண்பன் புன்னகை தவழ மொபைலில் ஊரிலிருக்கும் சொந்தங்களுடன் பேசிவிட்டு அமர்ந்தான், அயல்நாட்டில் பணிபுரியும் பெரும்பாலானவர்களைப் போலவே இவனுக்கும் வருடத்தின் 11 மாதங்கள் மொபைல் போன் வாழ்க்கை!

புன்னகையின் ரகசியத்தை நான் கேட்பேன் என்பதை புரிந்தவனாக அவனே சொல்லத் தொடங்கினான். 15 நாட்களுக்கு முன் குடும்பத் தேவைக்கு அனுப்பிய கார்கோ சாமான்கள் கிடைத்து விட்டதாம், கார்கோவை பிரித்துப் பார்த்த பிள்ளைகளும் குடும்பத்தினரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்களாம், ஆமா அவங்க சந்தோஷத்திற்கு தானே நாம் சம்பாதிக்கிறோம் என முனுமுனுத்த அவன் உள்ளத்தின் வார்த்தைகள் மெல்லிசாக உதடுகள் வழியாய் ஈரமாய் கசிந்தது.

எதிர்வரும் பிள்ளையின் பள்ளிக்கூட விடுமுறையில் தனது மனைவி, பிள்ளை மற்றும் அம்மாவையும் விசிட் விசாவில் எடுக்கக் இருக்கும் தனது நீண்டநாள் ஆசைக்கு அவர்கள் சம்மதம் சொன்னதாக சொன்னவன் அதற்கான விசாவுடன் பிற முன்னேற்பாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான்.

இதோ, என் நண்பனின் குடும்பத்தினர் துபாய் வரத் தேவையான விசா, ரிட்டர்ன் டிக்கெட், ஊருக்குச் சென்றிருக்கும் என் இன்னொரு நண்பனின் அறையை ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ள குறைந்த வாடகை பேசி வாங்கிக் கொடுத்தது என அனைத்தும் அவர்களின் வருகைக்காக தயார்.

குடும்பத்தினர் புடைசூழ்ந்து சந்தோஷமாக வழியனுப்ப தனி வேனில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அனைவருடைய உள்ளங்களிலும் முதன்முதலாக விமானத்தில் செல்லும் குதூகலம், துபையை சுற்றிப் பார்க்கப் போகும் ஆசை, தலைவனை (என் நண்பனை) காணப்போகும் ஆவல் என அனைத்தும் சேர்ந்து வார்த்தைகளில் வடிக்க முடியாத பூரிப்பு அவர்களின் கண்களுள் பட்டாம்பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்தன, சூழலுக்கு ஏற்றார் போல் விமானங்களின் புறப்பாடு, வருகை குறித்த இனிய அறிவிப்புகளும் அவர்களின் உள்ளத்தை அவர்களின் விமானம் புறப்படுமுன்பே கற்பனை வானில் பறக்கச் செய்திருந்தது.

ஆச்சு, செக் இன், எமிக்கிரேசன், பாதுகாப்பு பரிசோதனைகள் என எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து விமானத்தில் ஏறும் போது விமானப் பணிப்பெண்களின் இன்ஸ்டன்ட் புன்சிரிப்பு வாயில் வரவேற்புடன் பறந்து வந்து துபாய் விமான நிலையத்தில் இறங்கி இங்குள்ள இமிக்கிரேசன் இத்யாதிகள் முடிந்து வெளியில் வந்தவர்களை வரவேற்க என் நண்பனும் நானும் எங்கள் அலுவலக பணியை முடித்துவிட்டு நேராக விமான நிலையம் வந்திருந்தோம், எல்லோரும் வீடு சேர நள்ளிரவாகிவிட்டது.

என் நண்பன் அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ரிட்டர்ன் விமான டிக்கெட்டுகளை வாங்கி மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்டான். அனைவரையும் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நாளை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை பகல் உணவிற்குப்பின் 'புருஜ் கலிபா' எனும் உலகின் உயரமான கட்டிடத்தை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்ல காருடன் வருவதாகவும் அனைவரும் தயாராக இருக்கும்படியும் சொல்லி விடைபெற்றேன்.

சொன்னபடியே வெள்ளிக்கிழமை மாலை காருடன் என் நண்பன் வீட்டிற்கு போன என்னை வரவேற்றது நேற்றைய மகிழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத அழுகுரல்கள், புருஜ் கலிபா செல்லத் தயாராகி கொண்டிருந்த அவன் அம்மா எனக்கு ஏதோ செய்கிறது மகனே என நெஞ்சை பிடித்தவாறு அமர்ந்தவரின் உயிர் வேகமாய் வெளியேறி இருந்தது, விடைபெற்றுச் செல்வதில் எத்தனை அவசரம்!

சட்டப்படி உடனடியாக துபை போலீஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வந்து அம்மாவின் உடலை ஏற்றிச் செல்ல, மருத்துவ கூராய்வு உட்பட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து உடலைப் மீண்டும் கண்ணில் காண 3 நாட்களாகிவிட்டன. ஊரிலுள்ள குடும்பத்தார் கேட்டுக் கொண்டபடி இனி ஊருக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டும், இது இன்னொரு கிணற்றை தாண்டும் வேலை.

ரிட்டர்ன் டிக்கெட்டில் பயணியாக வந்தவர் இனி அந்த டிக்கெட்டில் திரும்ப பயணம் செய்யவே முடியாதாம், இனி அந்த கார்கோவை (உயிரற்ற பயணியை) ஊருக்கு அனுப்ப புதிய டிக்கெட் எடுக்க வேண்டுமாம். ஓரிரு நாளிலேயே பயணி கார்கோவாக கணக்கிடப்பட்டு சிறப்பு இருமடங்கு கட்டணத்தில் விமானத்தில் ஏற்றப்பட்டார், இப்போது புன்சிரிப்புடன் வரவேற்க விமானப் பணிப்பெண் யாருமில்லை, விமான நிலைய இனிய அறிவிப்புகளும் காதில் விழவில்லை.

சென்னை விமான நிலையத்தில் ஆம்புலன்ஸூடன் குடும்பத்தினர் கார்கோவை பெற காத்திருந்தனர். யாருக்கும் மகிழ்ச்சி தராத 'கார்கோ' இது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.