Breaking News
recent

ரமலான்:தமிழக தலைவர்கள் வாழ்த்து...!ரமலான் முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப், “இந்தியாவில் மற்றும் அயல் நாடுகளில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ரமலான் பண்டிகை வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில். “இந்த சிறப்பு மிக்க நன்னாளில் எனது வாழ்த்துக்கள். இந்நாள் சமாதானமும், அமைதியும் தலைத்தோங்க வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
கவர்னர் கே.ரோசய்யா:
இந்த புனித ரமலான் பண்டிகை காலத்தில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை, தொழுகை, தொண்டு மற்றும் நல்ல செயல்களை புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. இதை பின்பற்றி, சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி, அன்பு மற்றும் இரக்கத்துடன் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியான உலகை படைப்போம்.
முதல்வர் ஜெயலலிதா:
இஸ்லாமிய பெருமக்கள் இப்புனித ரமலான் மாதத்தின் 30 நாட்களும் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை ஏளியோருக்கு உணவளித்து, பள்ளி வாசல்களில் நடக்கும் சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரமலான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
இஸ்லாமிய மக்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
வக்பு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ.ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போல் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கங்களுக்கு அரசால் வழங்கப்படும் இணை மானியம் 1:2 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளது. நாகூர் சந்தனக் கூடுவிழாவுக்கு சந்தனக்கட்டை வழங்கப்படுகிறது.இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ரமலான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி: நபிகள் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு ரம்ஜான் கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் கோட்பாடுகளை திமுக எப்போதும் பெரிதும் மதித்து வந்துள்ளது.

விஜயகாந்த்: போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம் என்று நபிகள் நாயகம் கூறியதை பின்பற்றி வாழ வேண்டும். இந்த நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டும்.

வைகோ: இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்றலை, உன்னதமான முப்பது நாள்கள் கடைப்பிடித்து, விண்ணில் பிறை தோன்றும் நாளில் நிறைவு செய்து ரம்ஜான் கொண்டாடுகின்றனர்.

நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள், மனிதநேயத்துடன் அன்புகாட்டி வாழ்கின்றனர்.

இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச் சார்பின்மையாகும்.

இந்த அடித்தளத்தை தகர்க்கின்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் என்ற விபரீத முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை முற்றிலும் கைவிடவேண்டும்.

சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதிகொள்வோம்.

ராமதாஸ்: கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் விளங்குகின்றனர். அன்பு ஒன்றே அனைவரையும் வெற்றி கொள்ளும் சூத்திரம் என்று நபிகள் கூறுகிறார். நபிகள் அருளிய திருமறையில் உள்ள அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்: இஸ்லாமியர்களின் வாழ்வில் அன்பும், அறமும், அரவணைப்பும் பெருக வேண்டும். நலிந்தோர்க்கு உதவும் நற்பண்பு மேலும் வளர வேண்டும்.

தி.வேல்முருகன்: அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை. இந்தக் கோட்பாடுகளை ஜாதி, மதங்களைக் கடந்து நாம் என்றென்றும் கடைப்பிடிக்க உறுதியேற்போம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.