Breaking News
recent

ராம்குமார் கைது.. பொய்யாகிப் போன சுவாதி கொலையாளி குறித்து பரப்பப்பட்ட வதந்திகள்.!


சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக கொலையாளி ராம்குமார் என்பவரை தனிப்படை போலீசார் செங்கோட்டை அருகே கைது செய்தனர். 

முன்னதாக இந்த கொலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன.

 தற்போது கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி இன்போசிஸ் ஊழியர் சுவாதி, அடையாளம் தெரியாத வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இதனிடையே ரயில் நிலையம் அருகேயுள்ள வீடு மற்றும் கடை ஆகியவற்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான கொலையாளியின் சற்று தெளிவான உருவப்படத்தை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை முதல் வாட்ஸ்அப்பில் ஒருவர் படத்தை போட்டு இவர்தான் சுவாதி கொலையாளி என்றும், அவரை பிடித்து கொடுத்து உதவும்படியும் கோரிக்கை விடுத்து ஒரு மெசேஜ் தீயாக பரவியது.

 போலீஸ் வெளியிட்ட படத்தில் இருந்து இது மாறுபட்டதாக இருந்தது.

இருப்பினும், இந்த மெசேஜை பார்வேர்ட் செய்வதில் தனிப்பட்ட நபர்களும், வாட்ஸ்அப் குரூப் மெம்பர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் மெசேஜ் அதி விரைவில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமானது.

அந்த போட்டோவில் இருப்பவரது பெயர் பிலால் மாலிக். இவர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர், தற்போது மத்திய சிறையில் உள்ளார். 

இவரது படத்தைதான் பெயரை குறிப்பிடாமல் பரப்பியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சுவாதி கொலை தொடர்பாக பிரபல நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதி குறித்து ஒரு பதிவை எழுதியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

 இறந்த பெண் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அமைதி காக்கிறார்கள் என்றும் ஒரு தலித் பெண் இறந்திருந்தால் அனைவரும் வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் என்றும் எழுதப்பட்டிருந்த கருத்தை பகிர்ந்திருந்தார்.

அந்தப் பதிவில் கொலையாளி பெயர் பிலால் மாலிக் என்றும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு போலீசிலும் புகார் அளித்தனர். 

இதையடுத்து அந்தப் பதிவை நீக்கினார் மகேந்திரன்.
அதேபோல், நடிகரும், பாஜக பிரமுகருமான, எஸ்.வி.சேகர், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும், முஸ்லிம்களுக்கு உதவுங்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவுங்கள். 

ஏன் இந்துக்களுக்கு உதவ மாட்டேன் என்கிறீர்கள் எனக் கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இவரது கருத்து இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்டுவதாக உள்ளதாக பலரரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு குறித்து பரப்பட்ட வதந்திகள் அனைத்தும் பொய்யாகி போகியுள்ளது. தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கொலையாளியை போலீசார் செங்கோட்டை அருகே கைது செய்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.