Breaking News
recent

அரபு நாடுகளில் அவதிப்படும் தமிழகப் பெண்கள்.!


வீட்டு வேலை எனக் கூறி அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், அங்கு கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. உரிய விசாரணை இல்லாமல் வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையிலும், ஏழ்மையைச் சாதகமாக்கி குடும்பப் பெண்கள் பலரையும் அரபு நாடுகளுக்கு முகவர்கள் அனுப்பி வருவது தொடர்ந்து வருகிறது.

வெளிநாடுகளில் கட்டட வேலை உள்ளிட்ட கூலி வேலைப் பணிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 

வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று இளைஞர்கள் பலரும் ஏமாற்றப்படுவது குறித்த புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும். அண்மைக்காலமாக வீட்டு வேலை எனக் கூறி, பெண்களை அரபு நாடுகளுக்கு அழைத்துச் சென்று கொத்தடிமையாக வேலை வாங்குவது அதிகரித்துள்ளது. 

அரபு நாடுகள் பலவற்றுக்கும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பெண்கள் வீட்டு வேலைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பப் பெண்களைக் குறி வைக்கும் முகவர்கள், அவர்களிடம் மாதம் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் என ஆசை காட்டி சம்மதிக்க வைக்கின்றனர். 

ஆனால், இவர்களுக்கு வேலை செய்வதற்கான முறையானநுழைவுஇசைவு (விசா) எடுத்துக் கொடுப்பதில்லை. சுற்றுலா நுழைவுஇசைவில் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகின்றனர். தாங்கள் ஏமாற்றப்படுவதை அறியாத பெண்கள், முகவர்கள் சொல்வதை நம்பிச் செல்கின்றனர்.

கணவரை இழந்தவர்கள், கணவரைப் பிரிந்து வாழ்பவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களால் பிரச்னை வர வாய்ப்பு இல்லாத பெண்கள் ஆகியவர்களைத்தான் முகவர்கள் தேர்வு செய்கின்றனர். 

முகவர்களின் பேச்சை நம்பி சுற்றுலா நுழைவுஇசைவில் வெளிநாட்டுக்குச் செல்லும் அப்பாவிப் பெண்கள், அவர்கள் சொல்லிக் கொடுத்தபடியே உறவினர் வீட்டுக்குச் செல்வதாகத் தூதரக அதிகாரிகளிடமும் கூறி விடுகின்றனர். அங்கு சென்ற பிறகே அதலபாதாளத்தில் சிக்கிக் கொள்வது தெரிகிறது.

மதுரையைச் சேர்ந்த மேகலா (30) என்பவரின் தாய் தனது மகள் ஓமன் நாட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரைப் போல தமிழகப் பெண்கள் சிக்கியிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மேகலா, மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த தெüலத் (50) ஆகியோர் ஓமனில் இருந்து திரும்ப அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களில் தெüலத்தை, துபையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரின் வீட்டு வேலைக்கு எனக் கூறி அழைத்துச் சென்றனர். இவரை அனுப்பிவைத்த முகவருக்கு துபையில் இருக்கும் நிறுவனம் ரூ. 1.5 லட்சம் அளித்தது. துபை நிறுவனம் தெüலத்தை, ஓமனில் இருக்கும் ஒரு முகவரிடம் ரூ. 2 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்பியது. வீட்டு வேலைதானே என்று நினைத்தேன். 

காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வேலை செய்ய வைத்தனர். வீடு, தோட்டம், கழிப்பறையை சுத்தம் செய்வது, துணி துவைத்து இஸ்திரி போடுவது என்பது தினசரி நாள் முழுக்க வேலை இருக்கும். சரியான உணவு கிடைக்காது.

 இதற்கிடையே, சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி, செய்த வேலையையே மீண்டும் செய்யச் சொல்லித் துன்புறுத்தவும் செய்வர் என்கிறார் தெüலத்.

உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் சித்திரவதை அனுபவித்து வந்த அவர், அங்கிருந்து தமிழகம் திரும்பி வந்த சங்கீதா என்பவர் மூலமாகவே தனது குடும்பத்தினருக்குத் தகவல் கூறியிருக்கிறார். தன்னைப் போல நூற்றுக்கணக்கான பெண்கள் தகவல் தெரிவிக்க வழியின்றி அடிபட்டும், உதைபட்டும் சித்திரவதை அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.

அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொருளாதாரத் தேவைக்காக பெண்கள் ஏமாற்றப்படுவது தொடருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், இதுபோன்ற பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் முகவர்களைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதேபோல, வீட்டு வேலை போன்ற பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அரசே ஆள்களை தேர்வு செய்யலாம்

செவிலியர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அரசே ஆள்களைத் தேர்வு செய்வதைப் போல, வெளிநாடுகளில் உடல் உழைப்புப் பணிகளுக்கும் தேர்வு செய்யும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்கிறார் மதுரை மீட்பு அறக்கட்டளைச் செயலர் சிவசோமசுந்தரம்.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் சேவையை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை மட்டும் எங்களது நிறுவனம் மூலமாக மலேசியா, இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே முகவர்களால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்கள். சரியான உணவு, ஊதியம் இல்லாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்த நிறுவனம் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் துணை முகவர்களை நியமிக்கக் கூடாது. இதுகுறித்து அரசு ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அப்பாவி மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றுவதும் தொடர்ந்து வருகிறது. 

தமிழக அரசின் அயலக வேலைவாய்ப்பு நிறுவனம், பல்வேறு நாடுகளிலும் படிப்புக்குத் தகுந்த வேலைகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. அதேபோல, உடல் உழைப்பு பணிகளுக்கும் ஆள்களைத் தேர்வு செய்தால், அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும் என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.