Breaking News
recent

கிராமப்புற மாணவர்களை குறிவைக்கும் டுபாக்கூர் நர்சிங் பள்ளி, கல்லூரிகள்...ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்.!


ந்தியாவில் எங்கும் போலி, எதிலும் போலி, எல்லாவற்றிலும் போலி என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். அதிலும் கல்வித்துறையில் நிலை இன்னும் மோசம். அரசு அனுமதி பெறாமல் பள்ளிகளும், பல்கலைக்கழக அனுமதி பெறாமல் கல்லூரிகளும் சர்வசாதாரணமாக இயங்கி வருகின்றன. 

சில வருடங்களுக்கு முன்பு, மத்திய அரசு அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட டி.டி. மருத்துவக் கல்லூரி சென்னையில் மூடப்பட்டது. எவ்வளவுதான் எச்சரிக்கை செய்தாலும், விட்டில் பூச்சிகளைப்போல் போலி கல்வி நிறுவனங்கள் உருவாவதும், அதில் பணத்தை இழந்து மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தையே பாழாக்கிக்கொள்வதும் தொடர்கதையாகவே உள்ளது.
 
போலி கல்வி நிறுவனங்களின் டார்கெட், முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களோ அல்லது சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களோ அல்ல; குறைவாக மார்க் எடுத்தவர்களும், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுமே. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள்.
 


முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வரும்போது டுடோரியல் காலேஜ் விளம்பரங்கள் அதிகம் வரும். இப்போது அப்படி வருவதில்லை. ஃபெயிலானால் கவலையில்லை, எங்கள் நிறுவனத்தில் படித்தால் உடனே வெளிநாட்டில் வேலை, கைநிறைய சம்பளம், படிக்கும்போதே சம்பளம் என்று ஏமாற்றும் விளம்பரங்கள்தான் அதிகம் வருகின்றன.

நகரங்களில் ஒற்றை அறையை வாடகைக்கு பிடித்துக்கொண்டு இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் என்று கூசாமல் போர்டை மாட்டி வைத்திருப்பார்கள். அறையைவிட விளம்பரப்பலகையின் அளவு பெரியதாக இருக்கும். 

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பரோட்டா கடையெல்லாம் கேட்டரிங் காலேஜாக மாறிவிட்டன. 'எங்கள் இன்ஸ்டிட்யூட்டில் படித்தால் ஸ்டார் ஹோட்டலில் வேலை, இல்லேன்னா குறைந்தபட்சம் உள்ளூர் பரோட்டா கடையில் ஆம்லேட் போடுற வேலை கன்ஃபார்ம் என்று வருகின்ற அப்பாவி பெற்றோர்களிடம் சொல்கிறார்கள். 
 
ஊருக்கு ஊர் பாராமெடிக்கல் காலேஜ், சேப்டியே இல்லாத கூரை கொட்டகைக்குள் ஃபயர் ஃசேப்டி காலேஜ், பஸ் போகாத ஊரில் ஏரோ நாட்டிக்கல் காலேஜ், மருந்தாளுநர் பயிற்சி என ஏகப்பட்ட பெயர்களில் இன்ஸ்டிட்யூட்கள் 'செயல்பட்டு' வருகின்றன. 
  

இந்த பட்டியலில் அதிகம் இருப்பவை போலி நர்சிங் பள்ளிகள்தான். 6 மாதத்தில் நர்ஸ் ஆகலாம், ஒரு வருடத்தில் நர்ஸ் ஆகலாம், அரசு மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லலாம் என்று ஆசை வார்த்தைகளக் கூறி தெருவுக்குத் தெரு புற்றீசல்கள் போல் போலி நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் பெருகி வருகின்றன. 

கிராமப்புற மாணவர்களின் பணத்தையும், எதிர்காலத்தையும் கபளீகரம் செய்கின்றன, இந்த போலி நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்வி நிறுவனங்கள். தமிழகத்ததில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற  போலி கல்வி நிறுவனங்கள் குறைந்தது 25 முதல் 30 வரை இருக்கின்றன  என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்.

இவை நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களின் பணத்தையும், எதிர்காலத்தையும் நிர்மூலமாக்கி வருகின்றன. இதுவரை தமிழகத்தில் அரசு அனுமதிப் பெற்று முறையாக மாணவர்களுக்கு நர்சு பயிற்சி அளித்து வருகின்றன, கணிசமான நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புனிதமான இந்த நர்சிங் தொழிலுக்கான பயிற்சி அளிக்கக் கூடிய கல்வியில் வழக்கம்போல் போலிகள் புகுந்து ‘‘சதுரங்க’’ விளையாட்டு நடத்தி மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி வருகின்றன. 

இதற்கு காரணம் பி.எஸ்.எஸ். என்ற அமைப்புதான் என குற்றம் சுமத்துகின்றனர் ‘‘ஒரிஜினல்’’  நர்சிங் பள்ளியை நடத்துபவர்கள்.
போலி நர்சிங் பள்ளிகள் பற்றி தகவல் உரிமை சட்டப்படி தகவல் வாங்கிய  ராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்குளம் ராஜுவிடம் பேசினோம். 

‘’ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீர் திடீரென கிளம்பிய நர்சிங் பள்ளிகள், கல்லூரிகளில் கிராமப்புற ஏழை மாணவர்கள் அதிகம் சேர்ந்தனர். ஒரு நபருக்கு முப்பது முதல் ஐம்பதாயிரம் வரை ஆண்டுக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு சாதாரண ஷெட்டுகளில் நர்சிங் பள்ளிகளை நடத்தினார்கள். 

முறையான அனுமதி கிடையாது. சரியான பயிற்றுநர் கிடையாது. இங்கு படிக்கும் யாரும் அரசு வேலைக்கோ வெளிநாட்டுக்கோ செல்ல முடியாது. ஆனால், விளம்பரம் மட்டும் நம்புகிற மாதிரி இருக்கும். இவர்களால் ஏமாற்றப்பட்டு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாமலும், வேறு வேலைக்கு செல்ல முடியாமலும்,  ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

எல்லோரும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆர்.டி.ஐ.மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி பெற்ற நர்சிங் பள்ளிகள் குறித்த தகவலை கேட்டேன், அரசு நர்சிங் பள்ளி, பயனீர் நர்சிங் பள்ளியைத்தவிர மற்ற 22 நர்சிங் பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெறாதவை. இதில் பயிலும் மாணவர்கள் எங்கும் வேலைக்கு செல்ல முடியாது என்று கூறியிருந்தார்கள். 

அவர்கள் கட்டிய பணமும் போச்சு, வாழ்க்கையும் போச்சு. இது கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவதில்லை. தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பயிற்சி தருகிறோம், என்று விவரமாக விளம்பரம் செய்து, சம்பளமில்லாமல் வேலை செய்ய வைக்கிறார்கள். 

மொத்தமாக அவர்கள் வாங்கி கொள்கிறார்கள். இதில் தனியார் மருத்துவமனைகளும் குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால் போலி நர்சிங் பள்ளிகளை ஆதரிக்கின்றன. இவைகளை தடை செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு நான் நீண்ட காலமாக மனு அனுப்பி வந்தேன். 

இப்போதுதான் நர்சிங் கவுன்சில் விழித்துக்கொண்டு ஆக்‌ஷனில் இறங்கியுள்ளது. போலி நர்சிங் கல்லூரி, பள்ளிகளைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது’’ என்றார். 

இது தொடர்பாக தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கத்தலைவரான ராஜபாளையத்தை சேர்ந்த விவேகானந்தனை சந்தித்துப் பேசினோம்.
   
தமிழக அரசு நேரடியாகவே நர்சிங் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறது. இது தவிர அரசின் அங்கீகாரம் பெற்று  தனியார் நர்சிங் பள்ளிகளும், கல்லூரிகளும் கணிசமான அளவில் இயங்கி வருகின்றன. 

தனியார் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க மத்திய, மாநில அரசுகளின் அனுமதி அவசியம் பெற வேண்டும். 7 ஏக்கர் நிலம், மாணவிகள் கட்டாயம் விடுதியில் தங்கிப் படிப்பது, 25 ஆயிரம் சதுர அடி முதல் 75 ஆயிரம் சதுர அடிவரை கட்டடங்கள் என பல்வேறு விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 
  
டிப்ளமோ கோர்ஸ் மற்றும் பி.எஸ்.சி., எம்.எஸ்சி., நர்சிங் என்று டிகிரி கோர்ஸ்கள் நர்சிங் படிப்பில் உள்ளன. டிப்ளமோ கோர்ஸ் மற்றும் டிகிரி கோர்ஸ்களுக்கு பிளஸ்- 2 வில் அறிவியல் பாடப்பிரிவு அல்லது நர்சிங் தொழிற்கல்வி படித்தவர்கள்தான் இவற்றில் சேர முடியும். நர்சிங் டிப்ளமோ படிப்பிற்கு 3 ஆண்டுகள், நர்சிங் டிகிரி கோர்ஸ்களுக்கு 4 ஆண்டுகள் என அரசு நிர்ணயம் செய்துள்ளது.  

மேலும், பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., நர்சிங் படித்த 5 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை வைத்துதான் பாடங்கள் நடத்த வேண்டும். பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளன.. 
 
மத்திய அரசின் ‘‘பாரத் சேவக் சமாஜ்’’ என்ற தன்னார்வ அமைப்பு வரும் வரை, இவை சரியாகவே நடந்தது. அதன்பின் நிலைமை தலைகீழாகிவிட்டது.  

கிராமப்புற இளைஞர்களின் திறமையை வளர்க்கிறோம் என்ற பெயரில் தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி என்று ஆரம்பித்து இப்போது நர்சிங் பயிற்சி அளிக்கிறோம், என்று சொல்லி போலியான கல்லூரிகளுக்கும் இந்த அமைப்பு அனுமதி வழங்கி வருகிறது. 

இதன் விளைவு 6 மாதத்தில் நர்ஸ் ஆக்குகிறோம். ஒரு வருடத்தில் நர்ஸ் ஆக்குகிறோம் என்று பல போலி நிறுவனங்கள் ஆசை வார்த்தைகளை கூறி லட்சக்கணக்கில் மாணவர்களை சுரண்ட ஆரம்பித்தன. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு மாதம் தோறும் சம்பளத்துடன் நர்சிங் பயிற்சி வழங்கிறோம் என்று அவர்களின் உழைப்பையும் சுரண்டி ‘‘ கல்லா ’’ கட்டி வருகின்றன.
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் மன நல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பேறு கால மருத்துவம், இருதய மற்றும் அவசர கால சிகிச்சை போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

இது தவிர தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். குறிப்பாக நர்சிங் டிகிரி படிக்கும் மாணவர்கள் தனியாக 25 கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்தால்தான் அவர்கள் முழுமையான பயிற்சி பெற்று நர்சிங் டிகிரி படிப்பை முடிக்க முடியும்.  ஆனால் போலி நிறுவனங்கள் இந்த மாதிரி முறையான பயிற்சிகள் எதுவும் வழங்குவது இல்லை” என்றார் ஆதங்கத்துடன். 
  
ஆனால் பாரத் சேவா சங்க அமைப்போ, 'நாங்கள் இந்திய திட்ட கமிஷன் அமைச்சகத்தின் அனுமதி பெற்று கிராமப்புற  மாணவர்கள், கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், கம்ப்யூட்டர் மற்றும் தையல் உள்பட பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

பாரத் சேவக் சமாஜ் எந்தவொரு நர்சிங் சம்மந்தமான தொழிற்முறை சார்ந்த படிப்புகளை நடத்தவில்லை. தமிழகத்திலும் பி.எஸ்.எஸ். 

அனுமதியுடன் பல்வேறு கல்வி நிறுவனங்கள் திறமைக்கான பயிற்சி வகுப்புகளை மட்டுமே நடத்தி வருகின்றன. நர்சிங் என்ற வார்த்தையும் எந்த திறமைக்கான பயிற்சியின் பெயரில் பயன்படுத்துவதில்லை' என்று தங்கள் தரப்பு வாதமாக முன் வைக்கிறது. 
  
ஆனால், நிஜம் வேறு... இவர்களிடம் அனுமதி வாங்கியதாக சொல்லும் போலி நர்சிங் பயிற்சிப் பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களது விளம்பரத்தில் மத்திய அரசின் பி.எஸ்.எஸ். 

அனுமதி பெற்ற நிறுவனம் என்று குறிப்பிடுவதோடு  இந்திய அரசின் அசோகா சின்னத்தையும் விளம்பரத்தில் பயன்படுத்துகின்றனர். இதை நம்பித்தான் நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை மக்கள் ஏமாறுகின்றனர். 
   

இது தொடர்பாக தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஆனி கிரேஸை தொடர்பு கொண்டு பேசினோம்... 

“தனியார் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆகிய 4பேரிடம் அனுமதி பெற்றுத்தான் தொடங்க முடியும். 

அங்கீகாரம் பெற்ற இந்த தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே அவற்றை தமிழ்நாடு நர்சிங் கவுன்சலில் பதிவு செய்ய முடியும்.

தற்போது தமிழகத்தில் 170 தனியார் நர்சிங் பயிற்சி பள்ளிகளுக்கும், 210 நர்சிங் கல்லூரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. போலி கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில போலி கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்வி நிறுவனங்கள் பற்றிwww.tamilnadunursingcouncil.com எங்கள் இணைய தளத்திற்கு சென்று அந்த நிறுவனம், அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சேர்வது நல்லது” என்றார்.

நன்றி-விகடன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.