Breaking News
recent

நீர், காற்று மூலம் விண்ணில் பாயும் ராக்கெட் ! அரசு பள்ளி மாணவர்அர்ஷத்சாதனை.!


ராக்கெட் தொழில்நுட்பத்தில் உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்ப செய்து சாதித்த‌ மறைந்த முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் பிறந்த ராமநாதபுர மாவட்டத்தில் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் நீர் மற்றும் காற்றழுத்தம் மூலம் இயங்கக்கூடிய ராக்கெட் போன்ற பொருளை தயாரித்து பிளஸ் 1 மாணவர் சாதனை படைத்துள்ளார்.

ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் செய்யது தியான் அர்ஷத், 16. அறிவியலில் சாதனை படைக்கவேண்டும் என்ற இவரது விடா முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. 

தண்ணீர், காற்று ஆகியவற்றின் இழுவிசை மூலம் விண்ணில் பாயும் விதத்திலான ராக்கெட் போன்ற பொருளை வடிவமைத்துள்ளார். 

பிளாஸ்டிக் பாட்டிலில் பாதியளவிற்கு தண்ணீர் நிரப்பிய பின் அதனை மூடிவிட்டு காற்று வெளியேறாதவாறு சைக்கிள் மவுத் வால்டியூப் பொருத்தி எம்.சீல்., எனப்படும் பசையினால் இறுக்கமாக ஒட்டபட்டுள்ளது.

வால்டியூப் மூலம் பாட்டிலில் மீதமுள்ள வெற்றிடத்தில் அதிக அழுத்தம் கொண்ட காற்றை நிரப்பி, அதன் பக்கவாட்டில் சிறிய குழாய் இணைக்கப்பட்டுள்ளது. 

கட்டடத்தின் கீழிருந்து மேலாக 35 மீ., நீளமுள்ள கட்டுக்கம்பி கட்டப்பட்டு, அதில் தண்ணீர், காற்று நிரப்பப்பட்ட பாட்டிலை பொருத்தி அதன் வால்வினை திறந்தவுடன், காற்றின் இழுவிசையால் பாட்டில் மேல்நோக்கி மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் சென்றடைந்தது. 

செலவில்லாமல் ராக்கெட் விடும் மாணவரின் சோதனை முயற்சியை ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து செய்யது தியான் அர்ஷத் கூறுகையில்,“நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் கீழ், ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர் திசையில் செயல்படும் எதிர் வினை உண்டு.

 கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்தும் ராக்கெட்டை உயரே செலுத்த முடியவில்லை. இம்முறை நடந்த அறிவியல் கண்காட்சியில் இயற்பியல் ஆசிரியர் சாம் ராஜேஷ் உதவியுடன், பல்வேறு கட்ட சோதனைக்கு பின் வெற்றிகரமாக ராக்கெட் சென்றது,” என்றார். 

ஆசிரியர் சாம் ராஜேஷ் கூறுகையில்,“ உயர்ந்த மாடி கட்டடங்களுக்கு பொருட்களை இலகுவாக கொண்டு செல்லவும், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்தவும் இம்முறை உகந்ததாகும். 

எரிபொருள் இன்றி நீர், காற்று அழுத்தத்தின் மூலம் உந்துவிசையை ஏற்படுத்த இயலும்,” என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.