Breaking News
recent

இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கை மத்திய அரசு களங்கப்படுத்தியதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்; இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு பேட்டி.!


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் விரும்பும் எந்தவொரு மதத்தை பின்பற்றவும், பரப்புரை செய்யவும் கடைபிடிக்கவும் உரிமை அளித்துள்ளது. 


இந்த அடிப்படையில் அமைதி வழியில் இஸ்லாமிய பரப்புரையை செய்து உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்றவர் ஜாகிர் நாயக். அவர் ஒருபோதும் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை.

அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் அவதூறு பரப்பி களங்கப்படுத்தி வருகிறார்கள். அவரை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதை எதிர்த்து இன்று (சனிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கு பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.