Breaking News
recent

மரணதண்டனை: முஸ்லிம்கள், தலித்துகளுக்கு நீதித்துறையில் பாகுபாடா? - சத்தீஷ்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கேள்வி.!


சத்தீஷ்கர் மாநில தலைமை துணை தேர்தல் அதிகாரியாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளில் 94 விழுக்காட்டினர் முஸ்லிம்களாகவும், தலித்துகளாகவும் இருப்பதால் நீதித்துறையில் ஏதும் பாகுபாடு இருக்கிறதா? என தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பல்வேறு தரப்பிலிருந்து வெளிப்பட்டு வரும் நிலையில், சட்டீஸ்கர் அரசு மேனனை கண்டித்துள்ளது.

இது அலெக்ஸ் பால் மேனனின் சொந்த கருத்து மட்டுமல்ல, டெல்லி ஜவஹர்லால் நேரு சட்ட பல்கலைக்கழக ஆய்வுக்குழு இரண்டு ஆண்டுகளாக நடத்திவந்த ஆய்வின் முடிவும் இதைத்தான் கூறுகிறது. அந்த ஆய்வின் அறிக்கையில் இதுகுறித்து பல்வேறு விசயங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

கடந்த 15 ஆண்டுகளில் 1617 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 93.5 சதவீதத்தினர் தலித் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என  சட்ட ஆணையத்தின் உதவியுடன் டெல்லி தேசிய  சட்ட பலகலைக்கழகம் இரண்டு ஆண்டுகள் நடத்திய  ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2005 - 2015 கால கட்டத்தில் இந்தியாவில் பல்வேறு விசாரணை நீதிமன்றங்களில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட 1480 கைதிகளில் 73 கைதிகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது மரண தண்டனை பெற்றவர்களில் 95 சதவீதம் கைதிகள் உச்ச நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று விதிக்கப்பட்ட மரண தண்டனை நியாமற்றது என்று கூறி விடுதலை செய்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வின் படி மரண தண்டனை பெற்றவர்களில் நான்கில் மூன்று பகுதியினர் தலித் மற்றும் மத சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 75 சதவீதம் பேர் பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமானவர்கள். பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை பெறும் கைதிகளில் 93.5 சதவீதம் பேர் தலித்களாகவும், மத சிறுபான்மையினராகவும் இருக்கிறார்கள். 
இவர்கள் நீதிமன்றங்களால் கடுமையான தண்டனைக்கு ஆளாக காரணம், தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் கடும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த தகுந்த வழக்கறிஞர்களை அமர்த்த இயலாத நிலையே ஆகும். இத்தகைய கடும் தண்டனை அடைபவர்களில் 23 சதவீதம் பேர் பள்ளிக்கூட படிப்பு இல்லாதவர்கள். 
மற்றவர்கள் இடைநிலைக் கல்வியை கூட அடையாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் வக்கீல்களுடன் விவாதிக்க கூட வசதி அற்றவர்கள். இவர்கள் சிறைக் கூடங்களில் மற்ற கைதிகளுடன் வேலை செய்ய அனுமதிக்கப்படாமல் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 
இதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், போதிய மருத்துவ சேவை இன்மை ஆகியவை அவர்களை சிதைக்கின்றன. என்பன போன்ற அதிர்ச்சித் தகவல்கள் அந்த ஆய்வில் தெரியவந்தன.

இதுவரை கடந்த 11 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் அப்சல் குரு, மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப், மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் யாகூப் மேமன் ஆகிய மூவருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பதைக் காட்டிலும், மரண தண்டனை யாருக்கு வழங்கப்படுகிறது என்கிற வாதமே இந்த பிரச்சனையில் முக்கியமானதாக உள்ளது.

ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட, நலிந்த, மொழி மற்றும் மதச் சிறுபான்மையினரே மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆவர். இவர்கள், நீதிக்கான போராட்டத்தை நடத்த பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பலவீனமானவர்களாக உள்ளனர். 
பெருஞ்செலவை கொண்ட நீதிக்கான போராட்டம், சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வது, திறனற்ற மெத்தனப் போக்கு கொண்ட குற்ற விசாரணை, ஊழல், சட்ட பாதுகாவலர்களின் ஓர வஞ்சனை, குற்றவாளிகள் குறித்து முன்னரே தீர்மானித்தல், ஊடகச் செய்திகள் உருவாக்கும் அழுத்தம், போலியான பொது மனசாட்சி இவையெல்லாம் மரணத்தண்டனையை தீர்மானிக்கும் காரணிகளாகின்றன.
வரலாற்றின் ஊடே ஒரு ஆய்வை மேற்கொண்டால் ஒடுக்கப்பட்டவர்களும், ஏழைகளும், நலிந்தவர்களுமே மரணத் தண்டனைக்கு பலியாகியுள்ளனர். ஆகவேதான் உலகம் முழுவதும் மரணத்தண்டனைக்கு எதிரான குரல் அதிகரித்து வருகிறது. 
கொடிய குற்றவாளிகள் குறித்த கவலை நமக்கு ஏற்பட்டாலும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற நிலையில் இந்திய தேசத்தின் சட்டப் புத்தகத்தில் மரணத்தண்டனையை ஒட்டுமொத்தமாக ரத்துச் செய்வதே சிறந்தது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.