Breaking News
recent

தமிழக மக்களே பரிசு தொகை விழுந்துள்ளது என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் நம்பாதீர்கள் மாநகர துணை போலீஸ் கமிஷனர் தகவல்.!


பரிசு தொகை விழுந்துள்ளது என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் நம்பாதீர்கள் என சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆன்லைன் குற்றங்கள்:

ஆன்லைன் குற்றங்கள் தொடர்பான பயிற்சி கூட்டம் சேலம் லைன்மேட்டில் உள்ள மாநகர காவல்துறை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

உதவி கமிஷனர் பாரதி முன்னிலை வகித்தார். ஆன்லைனில் எந்த மாதிரியான பணம் மோசடி நடைபெறுகிறது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:–
கணினி வழியிலான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதனால் போலீசார் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் கிரீமர் ஸ்டம்ஸ் என்ற கருவியை மர்ம நபர்கள் பொருத்தி விடுகிறார்கள்.

ரூ.1 கோடி பரிசு:
இதனால் நாம் பணம் எடுக்க செல்லும் போது ஏ.டி.எம். கருவியில், கணக்கு நம்பர் பதிவாகி விடுகிறது. இதனை பயன்படுத்தி பணத்தை திருடி விடுகிறார்கள். 

இது தொடர்பாக ஏ.டி.எம். காவலாளிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் போலீசார் தெரியப்படுத்த வேண்டும். இதேபோல் இணையதளங்களில் மர்மஆசாமிகள் சில வங்கிகளின் போலி ஐ.டி.க்களை உருவாக்குகிறார்கள்.

பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிகளின் தகவல்களை வங்கியில் இருந்து கேட்பது போல் கேட்டு பெற்று பணம் திருடி விடுகிறார்கள். குறிப்பாக செல்போன் எண்களுக்கு உங்கள் நம்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனவும், அதற்காக ரூ.1 கோடி பரிசு விழுந்தது என குறுஞ்செய்தி வருகிறது. 

இதனை பெறுவதற்கு தொடர்பு கொண்டால் குறிப்பிட்ட தொகை முன்பணமாக கட்ட வேண்டும் எனவும் கூறுகிறார்கள். இதனை நம்பி பலர் பணம் கட்டி ஏமாந்து விடுகிறார்கள். 

மேலும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என கூறி ஏ.டி.எம். ரகசிய எண்களை பெற்றும், மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். மையங்களில் தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் ரகசிய எண்களை பார்த்தும் பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

செல்போனுக்கு குறுஞ்செய்தி:
இது போன்று ஆன்லைன்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. காரணம் அவர்கள் செல்போன் நம்பரை வேறு ஒருவரின் பெயரில் போலியாக பெற்று ஒரு நம்பருக்கு மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி, பணம் பெற்றுக் கொண்ட பின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்கள்.

 வருங்காலங்களில் இதுபோன்ற மோசடியை தடுக்க, பொதுமக்களும் வங்கி தொடர்பான எந்த விதமான தகவலையும் செல்போனில் யார் கேட்டாலும் தெரிவிக்காதீர்கள், பரிசு தொகை விழுந்துள்ளது என குறுஞ்செய்தி வந்தாலும் நம்பாதீர்கள்.

இவ்வாறு துணை போலீஸ் கமிஷனர் பேசினார்.

நன்றி-தினத்தந்தி 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.