Breaking News
recent

மீண்டும் ஒரு மதமாற்ற பரபரப்பு... இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் 250 தமிழக தலித் குடும்பங்கள்.!


நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக மதம் மாற முடிவு செய்துள்ளனர். 

இதனால் இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவுகிறது. பழங்கள்ளி மேடு கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர ஐந்து நாள் கோவில் திருவிழாவில் தங்களுக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. 

இது காலம் வரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து இவர்கள் கோவிலுக்கு வருவதற்கும், கோவில் விழாவில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இனியும் பொறுக்க முடியாமல்தான் இவர்கள் மதம் மாற முடிவு செய்துள்ளனர்.

6 பேர் மதம் மாறினர்:

இவர்கள் மதம் மாறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 தலித்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி விட்டனர். முறைப்படியாக அவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளனர்

தவ்ஹீத் ஜமாத்:
இதுகுறித்து உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தலித் மக்களை அணுகிப் பேசியுள்ளனர். திருக்குரான் நூலைக் கொடுத்து பேசினர். அதேபோல கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களும் அவர்களை வந்து பார்த்தனர் என்று கூறினர். இந்த நிலையில் இந்த மதமாற்றத்தைத் தடுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை களம் இறங்கியுள்ளனவாம்.

பேச்சுவார்த்தை:
மதம் மாற வேண்டாம். பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என்று இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தலித் சமுதாயத்தினரிடம் கூறி வருகின்றனராம். இதுதொடர்பாக இந்து அமைப்புகளின் பிரநிதிகள், தலித் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றனராம்.

அடிப்படை உரிமை கூட இல்லை:

இந்தக் கிராமத்தின் நிலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், எங்களது இளைஞர்களை எங்களாக் கட்டுப்படுத்த முடியவில்லை. மத மாற்றத்தில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

எங்களது உரிமைக்காக நாங்கள் பல விதங்களிலும் போராடிப் பார்த்து விட்டோம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எங்களது அடிப்படை உரிமையை பெற்றுத் தர தவறி விட்டன. எங்களால் எங்களது கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்குள் நுழையக் கூட முடியவில்லை.

ஒரு நாள் ஒதுக்கக் கோரிக்கை:

ஆண்டுதோறும் நடைபெறும் ஐந்து நாள் விழாவில் ஒரு நாளை எங்களுக்கு ஒதுக்கக் கோரி வருகிறோம். அந்த ஒரு நாள் மண்டகப்படியை வைக்க அனுமதி கோரி வருகிறோம். ஆனால் அந்த உரிமையை தர மறுத்து வருகின்றனர். 

எனது பெற்றோரும், தாத்தாக்களும் கொத்தடிமைகளாக இருந்தபவர்கள். ஆனால் எனது தலைமுறை அப்படி இருப்பதை நான் விரும்பவில்லை. தீண்டாமையும், அவமானமும் எனது பிள்ளைகளைத் தீண்டுவதை நான் விரும்பவில்லை. மதமாற்றம் மட்டுமே எங்களுக்கு விமோச்சனம் தரும்

தவ்ஹீத் ஜமாத் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அப்துல் ரஹ்மான் கூறுகையில் கிராமத்திலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து சில தொண்டர்கள் அங்கு சென்றனர். அவர்களிடம் மதமாற்றம் அவ்வளவு சுலபம் அளல். இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். 

ஏதோ ஒரு கோபத்திற்கு இஸ்லாமுக்கு வந்து விட முடியாது. முதலில் மதம் குறித்துப் படியுங்கள், பிறகு எங்களிடம் வாருங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். திருக்குரான் நூல்களையும் அவர்களிடம் கொடுத்துள்ளோம். 

அவர்களில் 6 பேர் இஸ்லாமுக்கு மாறுவதில் தீவிரமாக இருந்தனர். அவர்களின் ஈடுபாட்டைப் பார்த்து நாங்களும் அவர்களுக்கு சம்மதம் கொடுத்தோம். தற்போது அவர்கள் இஸ்லாமுக்கு வந்துள்ளனர் என்றார்.

அர்ஜூன் சம்பத்:
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில் இந்த விவகாரத்தில் யாரும் தலையிடத் தேவையில்லை. இது அரசு கோவில், அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிக் கொண்டுள்ளனர். விரைவில் அரசு இதில் நல்ல முடிவை எடுக்கும். தலித்களுக்கு கோவில் விழாவில் இடம் தர மற்ற சமுதாயத்தினருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் அவர்.

கரூர் நாகப்பள்ளி:

இதேபோல கரூர் மாவட்டத்தில் உள்ளது நாகப்பள்ளி கிராமம். இங்கும் இதே கதைதான். இதனால் 70 தலித் குடும்பங்கள் முஸ்லீம்களாக மாற முடிவு செய்துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால் தலித் மக்கள் தங்களுக்காக கட்டிய கோவிலை இன்னொரு சமூகத்தினர் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனராம்.

கோவில் ஆக்கிரமிப்பு:
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோவில் குழுவின் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், எனது தந்தை கட்டிய கோவில் இது. மற்ற கோவில்களில் எங்களை அனுமதிக்காத காரணத்தால் எனது தந்தை இந்தக் கோவிலை கட்டினார். 

ஆனால் தற்போது இலங்கையிலிருந்து திரும்பி வந்துள்ள சிலர் இக்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு எங்களை விரட்டி விட்டனர். போலீஸோ அல்லது மாவட்ட நிர்வாகமோ எங்களுக்கு உதவ முன்வரவில்லை. கோவிலை அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு போய் விட்டனர். இதனால் நாங்கள் மதம் மாறும் முடிவுக்கு வந்துள்ளோம் என்றார்.

தலித்துகள் விரட்டியடிப்பு:
சம்பந்தப்பட்ட ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலானது கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் நிதியுதவியைப் பெற்று இக்கோவிலைக் கட்டியுள்ளனர். இந்தக் கோவிலை தலித் அறக்கட்டளைதான் நிர்வகிக்கிறது. ஆனால் தற்போது ஜாதி இந்துக்கள் தலித்துகளை ஒதுக்கி வருகின்றனராம்.

அரவக்குறிச்சி போல:
நாகப்பள்ளி கிராமத்தில் ஒரு முஸ்லீம் வீடு கூட கிடையாது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அருகாமையில் உள்ள அரவக்குறிச்சியில் 40,000 முஸ்லீம் குடும்பங்கள் நிம்மதியாகவும், கெளரவமாகவும் வாழ்வதைப் போல நாங்களும் கெளரவமாக வாழ நினைக்கிறோம் என்று கூறுகிறார் வெற்றிவேல்.

மீனாட்சி புரம் பரபரப்புக்கு பின்னர்:
தமிழகத்தில் கடந்த 1981ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் மிகப் பெரிய அளவில் தலித் சமுதாயத்தினர் இஸ்லாமுக்கு மாறிய சம்பவம் நடைபெற்றது. 

இந்திய அளவில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 800 தலித் குடும்பங்கள் அப்போது மொத்தமாக இஸ்லாமுக்கு மாறினர். அதைத் தடுக்க வாஜ்பாய், மற்றும் பல அரசியல்வாதிகள் பெஜாவர் மடாதிபதி உள்ளிட்ட நாட்டின் மிகப் பெரிய மடாதிபதிகள், எல்லாம் மீனாட்சிபுரத்துக்குப் படையெடுத்து வந்தனர். 

ஆனால் ஜாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று தலித் மக்கள் கூறி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இப்போது நாகை மற்றும் கரூர் மாவட்ட கிராமங்கள் மீண்டும் மத மாற்ற பரபரப்புக்கு அடிக்கல் நாட்டியுள்ளன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.