Breaking News
recent

வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தவர்களுக்கு நோட்டீஸ் 7 லட்சம் பேருக்கு அனுப்ப வருமான வரித்துறை முடிவு.!


நிரந்தர கணக்கு எண் இல்லாமல் வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தவர்கள், ரூ.30 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய அசையா சொத்துக்கள் வாங்கிய 7 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

சேமிப்பு கணக்குகளில்...


வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகை செலுத்தப்படுவது, ரூ.30 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய அசையா சொத்துகளை வாங்குவது-விற்பது போன்றவை தொடர்பான பரிவர்த்தனைகளின்போது நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) இணைக்கப்படவேண்டும். வருடாந்திர தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான பணப்பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் வருமானவரித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி 2009-10 முதல் 2016-17 ஆண்டு வரையான காலப்பகுதியில் இத்தகைய 90 லட்சம் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் வருமான வரித்துறையிடம் உள்ளது. 


இவற்றில், கணினி தொழில்நுட்பங்களின் உதவியுடன் இவ்வாறு நிரந்தர கணக்கு எண் இல்லாத பரிவர்த்தனைகளை தனிக்குழுக்களாக ஒழுங்குபடுத்தி, நிரந்தர கணக்கு எண் இல்லாமல் சுமார் 14 லட்சம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக 7 லட்சம் பேரை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. இவற்றை மிகுந்த கவனத்துடன் அலசி ஆராய்ந்து வருகிறது.

விளக்க நோட்டீஸ்

இந்த பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களிடம் அதற்குரிய தங்கள் நிரந்தரக் கணக்கு எண்களை வழங்குமாறு கோரியும், விளக்கம் கேட்டும் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. இத்தகைய நோட்டீசுகளை பெறுவோரின் வசதிக்காக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளை ஒப்புக்கொண்டு, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அவர்களே நேரடியாக மின்னணு முறையில் பதிவு செய்வதற்கென புதிய செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது.


தாங்கள் வழக்கமாக மின்னணு முறையில் வருமானவரிக்கான படிவங்களை பதிவு செய்யும் இணைய தளத்திற்குச் சென்று, இந்தப் பரிவர்த்தனை தொடருக்கென அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணை பதிவுசெய்வதன் மூலம், இந்த பரிவர்த்தனைகளை தங்களது நிரந்தர கணக்கு எண்ணுடன் மிக எளிதான முறையில் இணைத்துக் கொள்ளலாம்.


ஒத்துழைப்பு தரவேண்டும்

இந்த நோட்டீசுக்கான தங்கள் பதிலை மின்னணு முறையிலேயே, பரிவர்த்தனையை ஒப்புக்கொண்டோ அல்லது அவை தங்களுடையதல்ல என்று மறுத்தோ பதிவு செய்யலாம். இத்தரப்பினரின் இணையதளம் மூலமான இத்தகைய பதில்களை வருமான வரித்துறை பரிசீலிக்கும். இந்த நோட்டீசுகளுக்கு எந்த வகையிலும் பதில் அளிக்காதவர்கள் குறித்த விஷயங்களில் வருமான வரித்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வருமானவரி துறையிடமிருந்து இத்தகைய நோட்டீசுகளை பெறும் பொதுமக்கள் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 


இதுகுறித்த கேள்விகள் ஏதும் இருந்தால், முடிந்தவரையில் வருமான வரித்துறையின் எந்தவொரு அலுவலரையும் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத்தவிர்த்து, வருமான வரித்துறையின் உதவி (ஹெல்ப் லைன்) எண்களை தொடர்பு கொள்ளலாம்.

போலி நபர்களை நம்பவேண்டாம்

வருமானவரித் துறையின் முகவர்கள் என்று போலியாக கூறிக்கொண்டு, இத்தகைய தகவல் தொடர்பு விஷயத்தில் உதவுவதாக தங்களை அணுகும் நேர்மையற்ற நபர்களின் உத்தரவாதங்களை நம்பவோ, அவர்களுக்கு இடம் கொடுக்கவோ வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.


மேற்கண்ட தகவல் இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.