Breaking News
recent

நம்புங்க உண்மைதான்.. சென்னையில் ஆஸ்திரேலிய தேர்தல்.!


அண்மையில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். 

ஆனால் தேர்தல் சமயத்தில் அமெரிக்கா சென்று விட்டதால், தேர்தலில் அவருக்கு வாக்களிக்க முடியாத நிலை. ' தவறாமல் வாக்களியுங்கள்'

 என்று விழிப்புணர்வு விளம்பரத்தில்  நடித்துவிட்டு தேர்தலில் வாக்களிக்காத நடிகர் சூர்யா சகட்டுமேனிக்கு விமர்சனத்துக்குள்ளானார்.

கடைசியில், நடிகர் சூர்யா அறிக்கை முலம் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு வேறு தள்ளப்பட்டார். 

அப்படி கொடுக்கப்பட்ட விளக்கத்தில், ''தான் அமெரிக்காவில் இருந்த போதும் வேறு ஏதாவது மாற்று வழியில் வாக்களிக்க வழி தேடினேன். 

என்னால் ஆன எல்லா வழியிலும் முயற்சித்தேன் வழி கிடைக்கவில்ல'' என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். 

நடிகர் சூர்யா மட்டுமல்ல நாடு விட்டு நாடு போய் வேலை பார்க்கும் அனைத்து இந்தியர்களுக்குமே இதே நிலைதான்.

 தாய் நாட்டில் தேர்தல் நடைபெறும்போது, அவர்களால் வந்து வாக்களிக்க முடியாத நிலை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 

விடுப்பு எடுப்பது, பணபிரச்னை என்று பல காரணங்களினால் தாய்நாட்டில் தேர்தலின்போது வாக்களிப்பது என்பது ஒரு கனவாகவே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இன்று வரை இருக்கிறது.  

அவ்வளவு ஏன்? சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்குகூட பலருக்கு சிரமங்கள் இருக்கக் கூடும். 

இது இப்படியிருக்க நேற்று ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அது. அந்த விளம்பரம் இவ்வாறு கூறுகிறது, ''ஆஸ்திரேலிய ஃபெடரல் தேர்தல் வரும் ஜுலை 2-ம் தேதி நடைபெறவுள்ளது. 

தென்னிந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள், சென்னை ஆஸ்திரேலிய தூதரகத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜுன் 20-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தேரதல் நடைபெறும். ஜுலை 2-ம் தேதி வரை, வாக்களிக்கலாம். 

மேலும்விவரங்களுக்கு,அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்'' என்று அந்த விளம்பரம் சொன்னது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இந்தியாவில் எத்தனை ஆயிரம் ஆஸ்திரேலிய மக்கள் வசிப்பார்கள் என்று தெரியவில்லை. 

மிக சொற்பமாகவே வசிக்கக் கூடும். ஆயிரம் பேர்கூட வசிக்க  வாய்ப்பில்லை. தமிழகம், பாண்டிச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள்கூட அதிகம் பேர் வசிக்க வாய்ப்பிருக்கிறது. 

. சில 100  ஆஸ்திரேலியர்களை வாக்களிக்க வைப்பதற்காக அந்த நாட்டு அரசு இத்தனை மெனக்கெடுகிறது. 

அந்த நாட்டு துணை  தூதரகம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறது.தங்கள் நாட்டு மக்களை வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுக்கிறது. 

அதற்காக 12 நாட்களை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. நாட்டு பிரஜைகளை மதிக்கும் மாண்பு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகவே அந்த விளம்பரம் இருந்தது. 

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் எந்த நாட்டில் வசித்தாலும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டுமாம். 

இல்லை என்றால் அவர்கள் முறையான காரணம் சொல்ல வேண்டுமாம். அப்படி இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமாம். 

அதானால்தான் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆஸ்திரேலிய தூதரகங்கள் அந்த அந்த நாட்டிலேயே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றன.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உண்டு. இதில் செனட் என்பது மேலவை. மக்களே இந்த செனட்டர்களை தேர்வு செய்வார்கள். 

இந்த முறை விக்டோரியா மாகாணத்தில் நமது சென்னை சூளைமேட்டை பூர்வீகமாக கொண்ட கார்த்திக் அரசுவும் போட்டியிடுகிறார். 

ஆஸ்திரேலிய செனட் சபைக்கு போட்டியிடும் முதல் இந்தியர் என்ற பெருமையும் கார்த்திக் அரசுவுக்கு உண்டு.

பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமல்ல, உள்நாட்டுக்காரர்கள்கூட, சொந்த ஊர் சென்று வாக்களிப்பது என்பது, சற்று சிரமமான விஷயமாகவேத்தான் தெரிகிறது. 

பல ஆண்டு காலமாகவே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல கோடி ரூபாய் செலவழித்து 100 சதவிகித வாக்குப்பதிவுக்காக போராடி வருகிறது. 

ஆனாலும் இதுவரை தேர்தல் ஆணையத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியா போல நமது தேர்தல் ஆணையமும் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட தொகுதிகள் இருந்தாலும் தூதரகங்கள் வழியாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்க வைக்கும் முயற்சியை மேற்கொள்வதை பரிசாத்திய முறையில் மேற்கொள்ளலாம். 

 அதுபோல், சட்டமன்ற தேர்தலில் ஊருக்கு ஊரு பேருந்து விடுவதற்கு பதிலாக சென்னை போன்ற பெரு நகரங்களில் 234 தொகுதியை சேர்ந்தவர்களும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து பார்த்ததால் தேர்தல் ஆணையத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு கனவு பலிக்க வாய்ப்பு இருப்பதாகவேத் தெரிகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.