Breaking News
recent

பெரம்பலூரில்தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் விளம்பரப் பதாகைகள்.!


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளின் படத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் வைத்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக தேர்ச்சி வீதத்தை விளம்பரப்படுத்தி மாணவர் சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில், சமச்சீர் கல்வி முறை, மாணவர்கள் அனைவருக்கும் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், முட்டையுடன் சத்துணவு, டிவி மூலம் நீதிக்கதைகள், சி.டி மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்கள் கற்றுத்தரப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, கல்வித் தரமும் அதிகரித்து வருவது பல பெற்றோர்களைக் கவர்ந்து வருகிறது என்றால் மிகையில்லை. 

மேலும், தமிழக அரசால் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை 314 அரசுப் பள்ளிகள் உள்ளன. முன்பு ஆட்சியராக இருந்த தரேஷ் அஹமது,அரசுப் பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பல்வேறு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தரவிட்டார். 

தற்போதுள்ள ஆட்சியர் க. நந்தகுமாரும் அப்பணிகளை தொடர்வதன் பலனாக ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் அதிகரித்து வருகிறது. 

கடந்த 2015-16 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 2-ம் இடமும், எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 9-வது இடத்தையும் பெற்றுள்ளது. 

தமிழகத்தின் சிறந்த பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வகையில் சூப்பர்- 30 எனும் சிறப்பு பயிற்சி, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றால் அரசுப் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சில பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.