Breaking News
recent

திருச்சியில் பிச்சை எடுக்கும் கும்பலுக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கும் கொடூர பெண்கள்.!


திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தோளில் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் 2 வயது முதல் 4 வயது குழந்தைகளுடன் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் பெண்கள் அதிகளவில் சுற்றுகிறார்கள். பரிதாபப்பட்டு பணம் கொடுக்கும் தர்ம பிரபுக்கள் மூலம் இந்த பெண்கள் நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை பணம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பெண்கள் சுமந்து பிச்சையெடுக்கும் குழந்தைகள் அவர்களது குழந்தைகளே கிடையாது. பிச்சையெடுப்பதற்காக திருச்சி–மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து இத்தொழிலில் ஈடுபடுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அந்த கிராமத்தில் பிச்சையெடுக்கும் கும்பலிடம் ரூ.100 பணத்தை பெற்றுக் கொண்டு குழந்தைகளை பெண்கள் வாடகைக்கு விடுவதாக கூறப்படுகிறது. திருச்சி பஸ் நிலையங்களில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் முகங்கள் சம்பந்த மில்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 50 வயது பெண் 2 வயது குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்.
இந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிய நிலையில் இருப்பதற்கு அதற்கு தூக்க மாத்திரை கொடுக்கப்படுவது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சந்தேகப்பட்டு யாராவது விசாரித்தால் குட்டு வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக குழந்தைகளை மயக்கநிலையிலேயே வைத்து பிச்சையெடுக்கிறார்கள்.
இது போன்று குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து பெண்கள் பிச்சையெடுப்பது போல சிலர் குழந்தைகளை கடத்தி வந்து பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வரும் தகவலும் திருச்சியில் வெளியாகியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் திருச்சி ஜங்சனில் இது போன்று கடத்தி வரப்பட்டு அனாதையாக விடப்பட்ட 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் சந்தேகப்பட்டு துரத்தியதால் மாநகராட்சி துப்புரவு பெண் தொழிலாளர் ஒருவரிடம் கழிப்பறைக்கு சென்று விட்டு வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி 3 வயது குழந்தையை கொடுத்துவிட்டு சென்ற தாய் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. இந்த குழந்தை வாடகைக்கு எடுத்து வரப்பட்ட குழந்தையாக இருக்கலாம். அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதே போன்று கடந்த மாதம் காந்தி மார்க்கெட்டில் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வந்த முதியவர் வழக்கம் போல இரவில் தான் வளர்க்கும் குழந்தையுடன் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய போது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவமும் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கடத்தி வரப்பட்ட குழந்தைக்கு அதிகளவு மாத்திரை கொடுத்ததால் இறந்து விட்டது என்று அனாதையாக வீசிவிட்ட சம்பவமும் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்று குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களை திருச்சி கண் டோன்மென்ட் மகளிர் போலீசார் கைது செய்தனர். அப்போது அந்த குழந்தைகள் பற்றி அந்த பெண்கள் முன்னுக்குபின் முரணாகவே பதிலளித்தனர்.
தற்போது பிச்சையெடுக்கும் கும்பல் இதை நெட் வொர்க் அமைத்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பிச்சையெடுக்கும தொழிலில் ஈடுபடும் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பெண் சமூக அலுவலர் ஒருவர் கூறும் பொழுது தெரிவித்ததாவது:–
திருச்சியில் இது போன்ற சம்பவங்களில் பிடிபடுபவர்களிடம் தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் இந்த தொழில் பெருகி வருகிறது. மீட்கப்படும் குழந்தைகளின் தாய் அல்லது பெற்றோர் கண்டுபிடிக்கப்படுவதில்லை. ஆழ்ந்த விசாரணையை யாரும் செய்வதில்லை. இதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை.
சமூக சிந்தனை, நலன் யாருக்கும் இல்லாததால் தான் பஸ் நிலையங்களில் இது போன்று நடைபெறும் தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை.
குழந்தைகளுடன் சாலைகளில் சுற்றி திரிபவர்கள், பிளாட் பாரங்களில் தங்குபவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். அப்போது மேலும் பல திடுக் கிடும் தகவல்கள் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.