Breaking News
recent

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு:கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த முஸ்லிம் பெண்.!


உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கர்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுக்க நேர்ந்தது.

தனபவன் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஃபாத்திமா என்ற 37 வயது கர்ப்பிணி பிரசவ வலியுடன் அண்மையில் வந்துள்ளார். 

ஆனால், அவரை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் மறுத்ததாகவும், பிரசவத்துக்காக குறிக்கப்பட்ட நாளில் வருமாறு அவரிடம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஃபாத்திமாவும், அவரது கணவரும் பல முறை வலியுறுத்தியும், உள்நோயாளியாக சேர்க்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பேறு கால வலியால் அவதியுற்ற ஃபாத்திமா மருத்துவமனை கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரத்துக்கு முன்னர் முசாஃபர் நகரில் அமைந்துள்ள மற்றொரு அரசு மருத்துவமனையில் இதேபோல கர்ப்பிணி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து சாலையில் அவருக்கு பிரசவம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.