Breaking News
recent

தவிர்ப்போம் ஸஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை.!


புனித ரமலான் வந்து விட்டது அதை எப்படி பயனுள்ள மாதமாக, நன்மைகளை அள்ளிக் குவிக்கும் மாதமாக மாற்றலாம் என்று உலமாக்கள் நமக்கு சொல்லி தருகிறார்கள். பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்கி, குர்ஆன் திலாவதுக்கள் அதிகம் ஓதி, திக்ருகள் சலவாத்துக்களில் நமது நாவை ஈடுபடுத்தி, நடுநிசியில் தஹஜ்ஜத் தொழுது, பாவ மன்னிப்பு தேடி, சஹர் செய்து பின் சுபுஹு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அல்ஹம்து லில்லாஹ்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இவை எல்லாம் உபதேசிக்கப்படும் நேரம் சஹர் நேர ஒளிபரப்பு என்று ஒரு நிகழ்ச்சி எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.
இந்நிலையில்…. ரமளானில் கடமையான நோன்பை நோற்க ரஹ்மத்தான சஹர் உணவை சாப்பிட எப்படியும் துயில் எழுந்து விடுகிறோம். அதற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து நம்மில் பலர் தஹஜ்ஜத் தொழலாம். மற்ற நாட்களை விட ரமளானில் இது இலகு. ஆனால் அதை செய்யாமல்… ஸஹர் நேரத்தில் முன்னரே எழுந்து இப்போது டிவிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறோம். காரணம்…? எல்லா இயக்கங்களும் எக்கச்சக்க சஹர் ப்ரோகிராம்கள் போடுகின்றன. இதனை அவசியம் பார்க்க சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்கள் வேறு. அதிலும் இசையுடன் கூடிய ஏகப்பட்ட வர்த்தக விளம்பரங்கள். ஒரே டிவியில் முடிந்த வரை விளம்பர இடைவெளியில் சில நிகழ்ச்சிகளை காண்கிறோம்.
பல்வேறு சேனல்களில் பல்வேறு உலமா பெருமக்கள் இந்த புனித ராமலானிலே குறிப்பாக நடு நிசியில் ஆரம்பித்து சுபுஹு தொழுகை வரை செய்ய வேண்டிய நல் அமல்கள் பற்றி பேசுகிறார்கள், இவற்றை உருக்கமாக கேட்டுக் கொண்டிருப்பவர்களை அவர்கள் மனைவிமார்கள் சஹர் சாப்பிட அழைக்கிறார்கள். இப்போது மணி 4.30 சஹர் முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன.
குறைந்த நேரமே இருந்தும், அதில் தட்டை பார்த்து சாப்பிடாமல்… டீவியை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறோம். அவசர அவசரமாக சஹர் செய்துவிட்டு பள்ளி வாசல் நோக்கி நடக்கும்போது முஅததின் சுபுஹு தொழுகைக்கு அழைக்கிறார். அன்றைய சிறப்பான இரவு ஆலிம் பெருந்தகை சொன்ன எந்த அமல்களும் செய்யப்படாமல் கழிகிறது. அடுத்த நாள் இரவும் இப்படியே.. இவ்வாறாக சேனல்களின் சேட்டைகளால் ஷைத்தான்களுக்கு கொண்டாட்டமாகி விடும்.
ஏன்..? கொஞ்சம் பொறுத்தால்… அதே உரை சிடியாக நமக்கு கிடைக்க போகிறது..! அல்லது ஃப்ரீ டவுன்லோடு ஆப்ஷன் அவர்கள் வெப்சைட்டில் வைக்கிறார்கள்..! அல்லது ரமளான் முடிந்தவுடன் தங்கள் வழமையான மாலை / இரவு நேர ப்ரோகிராம்களில் மறு ஒளிபரப்பு செய்ய போகிறார்கள்…! அப்போது ஆற அமர அமர்ந்து பார்ப்பதைவிட்டுவிட்டு… எதுக்கு நாம் நமது நன்மையை… அதுவும் வணக்கத்திற்கு சிறந்த ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலத்துல் கத்ர் எல்லாம் வரப்போகிற ரமளானில்… அதுவும்… துவா கேட்கும் சிறந்த நேரத்தை…. ஏன் இழக்கனும்..? சிந்திக்கவும் சகோதரர்களே..!
நள்ளிரவு நேரம்..!
சாதாரண நாட்களில் நம்மில் பலர் தூங்கி விடுவது உண்டு. வெகுசிலரே நள்ளிரவு நேரமான தஹஜ்ஜத் நேரத்தில் எழுந்து அதை தொழுகிறோம். நைட் ஷிப்டில் இருக்கும் போது மட்டும் எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். நம்மில் பலர் மற்ற ஐந்து வேலை நேர தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் சரியாக நிறைவேற்றுபவர்கள் கூட தஹஜ்ஜத் கடமையான தொழுகை இல்லாததால் அதில் அவ்வப்போது கவனக்குறைவாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
தஹஜ்ஜத் என்ற நள்ளிரவு தொழக்கூடிய தொழுகை மற்ற ஐந்து வேலை தொழுகைகள் மற்றவைகளுக்கு கடமை ஆவதற்கு முன்னரே அல்லாஹ் தான் தூதருக்கு மட்டும் இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதனை கடமை ஆக்கி இருந்தான்..!
பிரார்த்தனையும் வணக்கமே..!
அல்லாஹ் நம்மை பிரார்த்திக்கவும் சொல்கிறான் எனபதை அறிவோம். நபி (ஸல்) அவர்களும் கூட, “பிரார்த்தனையே வணக்கமாகும்” எனக் கூறியுள்ளார்கள்.
இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் “பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் என்று புரியலாம். அல்லாஹ் நமக்கு ஒரு பிரத்தியேகமான பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருள நாடுகின்றான் என்றும் புரியலாம்.
பிரார்த்தனைக்கு ஆக சிறந்த நேரம் எது…?
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும், ‘என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்’ என்று கூறுகின்றான்” (அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்: ஸஹீஹ் புகாரி)
அந்த நேரம்…, இரவுத்தொழுகைக்கான நேரம் அல்லவா..? அதைவிட அல்லாஹ்வே வலியுறுத்திய துவா கேட்க சிறப்பான நேரம் அல்லவா..? அந்த நேரத்தை எந்த ஜமாஅத்தும் ஜமாஅத் தொழுகையில் ஹயாத் ஆக்கக் காணோம்…! ஆனால், நம்மை துவா கேட்கவும் விடுவதாக இல்லையே..? இது சரியா..?
ஆகவே, அந்த நேரம் தஹஜ்ஜத் தொழும் நேரம். தொழுதுகொண்டே சஜ்தாவில்… அல்லது தொழுதுவிட்டு இருகரம் ஏந்தி… மனம் ஒருமித்து…. நமது தேவைகளை நாம் கேட்கும் துவாவுக்கான அல்லாஹ் ஏற்படுத்தி தந்த சிறந்த நேரம். இதை பாழ்படுத்துகின்றன இந்த சஹர் நேர ப்ரோகிராம்கள்..!
எவரும் இதை சஹர் நேரத்தில் மக்களுக்கு சொல்வதில்லை. சொன்னால் அது அவர்களுக்கே நஷ்டம். நாம் தான் நம்மிடையே இதை பரப்பிக்கொள்ள வேண்டும்..! யார் அதிக நேரம் ப்ரோகிராம் போடுவது… எந்த இயக்கத்துக்கு முன்னணி சேனல்கள் கிடைத்தன… எவ்வளவு விளம்பரம் வருகின்றன…. டிஆர்பி ரேட் எப்படி…. என்பதிலேயே போட்டி… இவற்றில் லீடிங் என்றால் அது பெருமை..!
ஆகவே…. இஸ்லாமிய தாவா நோக்கத்தில் அமைந்த சொற்பொழிவு என்றாலும்… அந்த ஸஹர் நேர டிவி ப்ரோக்ராம்களை எல்லாம் ஒதுக்கி விட்டு… நாம் நமக்கான நன்மையை சரியான நேரத்தில் தொழுது சிறப்பான நேரத்தில் பிரார்த்தித்து பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஸஹர் நிகழ்சிகளும் (அரசியல்) கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
முன்பு ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது. இன்று ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. நாளை ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும்.
தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது. தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.
ஆனால், அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.
ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம் என நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள். அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
ஸஹர் நிகழ்ச்சிகளை தவிர்ப்பதே நல்லது. “ஸஹர் நேர உணவில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது” என்று இருக்கும்பொழுது, அந்த நேரத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு உணவருந்துவதால் நம்மால் எப்படி இறைவன் தரும் பரக்கத்தைப் பெறமுடியும்? அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஐந்து மணி வரை தொடர்வதால் ஃபஜர் தொழுகையை கூட்டாக தொழும் வாய்ப்பும் தவறிவிடுகிறதே? இதை பற்றியெல்லாம் மார்க்கம் பேசும் தலைவர்கள் சிந்திக்கமாட்டார்களா?
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நாம் அளிக்கும் தொகை குறித்து…
ஸஹர் நேர நிகழ்ச்சிகள் எதுவும் இலவசமாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதில்லை. இலட்சகணக்கான ரூபாய்கள் பல தொலைகாட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறைந்தபட்சம்ஆறு சேனல்களில் காட்டப்படுகின்றன. அந்த நேரங்களில் அனைத்து தொலைகாட்சிகளும் வெறும் பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும். நம் சமுதாயம் கொடுக்கும் பணம் அவர்களுக்கு மிகப்பெரும் இலாபம். அதற்காக அவர்கள் நம் சமுதாயம் குறித்த நல்ல செய்திகளையா சொல்லி விடப் போகிறார்கள்? இல்லை மற்ற நாட்களில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யுங்கள் என்று சொல்லி விடப் போகிறார்களா? சமுதாய மக்கள் தங்களின் இரத்தம் சிந்தி உழைத்த பொருளாதாரம் எதற்கும் பயன்படாமல் வெற்று காகிதம் போல் செலவிடப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக ரமழான் மாதம் முழுவதும் செலவிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொகையை வைத்தே சமுதாயத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்க முடியும். மார்க்கத்திற்கோ, சமுதாயத்திறகோ எவ்வித பயனையும் தராத இந்த சஹர் நேர தொலைக்காட்சி நிகழ்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பொருளாதார உதவிசெய்வோர் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அன்பு சகோதரர்களே சிந்தித்து பாருங்கள். இப்படியே ரமலான் முழுவதும் கழிந்தால் இரவு நேர அமல்கள் எங்கே செய்ய முடிகிறது. வீணாக இந்த இரவுகள் தொலைகாட்சி முன்னால் சஹர் நேர ஒலிபரப்பு என்ற வடிவில் ஷைத்தானுடைய வலையில் நாம் விழுந்து விடுகிறோம். எனவே சஹர் நேர ஒளிபரப்பை ஷைத்தானின் ஒளி பரப்பு என்று நினைத்து அதை தவிர்த்து, தொலைகாட்சி பெட்டிக்கு ஒய்வு கொடுத்து இரவு நேர அமல்களை அதிக படுத்துவோம்.
ஸஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த பல சிந்தனையாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கி இப்பதிவு தயாரிக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றிகள்.
– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, குவைத்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.