Breaking News
recent

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிகள் நிறைவு.!


புனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது.
இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது. இப்போட்டிக்கான விருதுகள் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. 
திருக்குர்ஆனை மனனம் செய்வதோடு மட்டுமல்லாமல் சரியான உச்சரிப்போடு மிக அழகாக ஓதுவது என்று எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் இப்போட்டி.



இந்த ஆண்டு 81 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்று, இறுதியாக வெறும் எட்டு நாடுகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. அவை தாய்லாந்து, பனாமா, பஹ்ரைன், செனிகல், துருக்கி, வங்காளதேசம், லிபியா மற்றும் நைஜர் குடியரசு. 

வியாழன் இரவு நடந்த குரல் வளத்திற்கான இறுதிச் சுற்றில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இருபத்தி இரண்டு வயது நிரம்பிய ஜாஸிம் கலிஃபா இப்ராஹிம் கலிஃபா ஹம்தான் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசை வென்றார். 

81.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடத்தை வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் மாமுன் வென்றார்.

திருக்குர்ஆனை மனனம் செய்தது தனக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் அளித்ததாகவும். திருக்குர்ஆனால் மட்டுமே தன்னுடைய உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் ஒளிர செய்ய முடியுமென்று நம்புவதாகக் கூறினார் இப்போட்டியின் வெற்றியாளர் ஜாஸிம் ஹம்தான். 



எதிர்காலத்தில் ஒரு போதகராக விரும்பும் ஜாஸிம் ஹம்தான், இஸ்லாமிய மற்றும் அரபு ஆய்வுகள் பற்றிப் பயிலும் பஹ்ரைன் பல்கலைக்கழகத்தின் மாணவர். திருக்குர்ஆனோடான தனது பயணத்தை, தமது ஏழாவது வயதில் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார். 

முன்னதாக, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியின் 32 அரசாங்க மற்றும் தனியார் அனுசரணையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் துபாய் சர்வதேச மரெய்ன் கிளப்பின் தலைவர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷீத் அல் மக்தூம் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். ‘மாலை மலரின்’ சார்பாக திருமதி.ஜெஸிலா பானு நினைவுப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.



கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா அவர்களும் உடனிருந்து பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

சிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் அவர்களின் பிரார்த்தனைகளோடு இவ்விழா நிறைவடைந்தது. அத்தோடு வழக்கம்போல் குலுக்கல் முறையில் பார்வையாளர்களிலிருந்து ஒரு வெற்றியாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பும் தரப்பட்டது. 
இந்தப் பரிசு துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல்மக்தூம் அவர்களின் மனைவி மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் அவர்களால் வழங்கப்படுகிறது. 

துபாய் ஊடகப் பிரிவின் தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான திரு. அஹமத் அல் ஸாஹித் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.