Breaking News
recent

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில்இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார் தமிழர்.!


துபாயில் நடைபெறும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் அஹ்மத் உமர். இவர் இலங்கையின் புறநகர் பகுதியான அதுல்கம பண்டாரகமவைச் சேர்ந்தவர்.

தனது பத்தாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து அரை நாள் மட்டுமே பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தவர், ஆர்வமிகுதியால் தமது பன்னிரெண்டாம் வயது முதல் முழுநேரமும் திருக்குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தமது பள்ளிப் படிப்புடன் சேர்த்து திருக்குர்ஆனையும் மனனம் செய்து முடித்துவிட்டார்.

தந்தையில்லாத அஹ்மத் உமருக்கு தனது படிப்பில் மிகவும் உறுதுணையாக இருந்து உற்சாகம் தந்தது தனது தாய் நூருல் ஷிஃபா என்கிறார்.

அஹ்மத் உமரின் தாய்மாமன்தான் அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து பண உதவி செய்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடந்த குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர், துபாய் சர்வதேசப் போட்டியில் பங்குபெறும் தகுதிச் சுற்றுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். தகுதி பெற்றவரை இலங்கை அரசாங்கமே தமது செலவில் இப்போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இப்போட்டியில் குரல், உச்சரிப்பு, நினைவாற்றல் என்று எல்லாத் தகுதியும் பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ரூபாய் ஐம்பது லட்சத்தை முதல் பரிசாகக் கொண்டுள்ள இப்போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் வரவேண்டுமென்பதே தமது குறிக்கோள் என்கிறார் அஹ்மத் உமர்.

நல்ல உச்சரிப்புடன், சரியான குரல்வளத்துடன் தமது அமர்வை முழுமைப்படுத்திவிட்ட அஹ்மத் உமர் நினைவாற்றல் தேர்வில் ஒரு சில தவறே செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜாமியா இனாமி ஹஸன் பள்ளியில் பயன்றவர் வெற்றி பெற்று தம் நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். தமது வருங்காலத் திட்டம் குறித்து கேட்கும் போது, மார்க்க சட்ட திட்டங்களை சரியாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மவ்லவியாக வேண்டும் என்று சொன்னவர், கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்பதே தமது தலையாய லட்சியம் என்றார்.

இவர் இப்போட்டியில் வெற்றி பெறுவாரா தம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரா என்று இன்னும் சில தினங்களில் இப்போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.