Breaking News
recent

பள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.!


மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்ற அரசு ஆணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் தான் பெரிய தடைகற்களாக இருந்து வருகிறது.

சம உரிமை சமத்துவத்தின் அடிப்படையில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. 

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

கடந்த 1973-ல் தமிழக கல்வித்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசு ஆணையில், ‘‘மாணவர்கள் தங்களது சாதி, மதத்தை பள்ளி கல்விச்சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களில் குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்தால் அதை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அப்படி ஒரு அரசாணை இருப்பதே பொதுமக்களுக்கு தெரியாது. தவிர இதுதொடர்பாக கடந்த 2000-வது ஆண்டிலும் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களில் கண்டிப்பாக சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என நிர்பந்திக்கின்றன.

இதனால் சாதி, மதமே வேண்டாம் என நினைப்பவர்கள் கூட கல்விக்காக சாதியைக் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

எனவே இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர மற்ற மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில் சாதி, 

மத விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போதுநீதிபதிகள்,‘‘கல்விச்சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட விரும்பாத பெற்றோர்களை பள்ளி மற்றும் கல்வி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது என ஏற்கெனவே அரசு ஆணை தெளிவாக உள்ளது. 

ஆகவே அந்த ஆணை குறித்து பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறைச் செயலர்கள் மக்களிடம் சென்றடையும் அளவிற்கு விளம்பரப்படுத்த வேண்டும்.

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் கல்விச்சான்றிதழ்களில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் நிர்பந்திக்கக்கூடாது. 

ஆனால் மாற்றுச்சான்றிதழைப் பொருத்தமட்டில் சில பெற்றோர் சாதியைக் குறிப்பிட வேண்டும் என விரும்புகின்றனர். 

ஆகவே, பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி நிர்வாகங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.