Breaking News
recent

இனி இ-சேவை மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்.!


தமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில், 10,500 இடங்களில், இ - சேவைமையங்களை அரசு நடத்தி வருகிறது. 'எல்காட்' எனும் தமிழக மின்னணு நிறுவனம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், வறுமை ஒழிப்பு திட்ட மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவற்றை நிர்வகித்து வருகின்றன.

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த மையங்களில், தற்போது அதிகபட்சமாக, 50 சேவைகள் வரை வழங்கப்படுகின்றன. சமீபத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இவற்றுடன்கூடுதலாக, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை, பொதுமக்கள் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, 135 நகராட்சிகளில், 50 நகராட்சிகளில் மட்டுமே, ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. இதே போல், புதிதாக, 92 வித சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எல்.எல்.ஆர்., - எப்.ஐ.ஆர்.,தமிழக அரசின், இ - சேவை மையங்களில், சத்தமின்றி, இரு புதிய சேவைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், எல்.எல்.ஆர்., எனப்படும் வாகன பழகுனர் உரிமம் பெற, குறித்த நேரத்தில் சென்று ஓட்டிக் காட்டுவதற்கு, 'ஆன் - லைனில்' முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டம், அமலில் உள்ளது. 

அதை இனி, இ - சேவை மையங்களில் பெறலாம்.இதுபோல், காவல் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல்தகவல் அறிக்கையின் எண்ணை குறிப்பிட்டால், அந்த வழக்கு எந்த கட்டத்தை அடைந்துள்ளது என்பதை அறியும் வசதியும், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என, தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்தனர்.

'செக்யூரிட்டி செக்'

இ-சேவை மையங்களில், சொத்து வரி செலுத்தும் திட்டத்தை, செயல்படுத்துவதற்கு முன், அது தொடர்பான ஆவணங்களை, இ - சேவை மையங்களின் கட்டுப்பாட்டு அமைப்பான, 'சர்வரில்' ஏற்றுவது பாதுகாப்பானதா என்பதை அறிய, சோதனை நடந்து வருகிறது. 

இந்த சோதனை, உரிய பயனாளிகளை தவிர்த்து, வேறு யாரும் தகவல்களை பார்த்து விடாமல் இருப்பதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அது முடிந்ததும், ஒருசில நாட்களில் திட்டம் அமலாகும். இந்த சோதனையை, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.