Breaking News
recent

உ.பி.யில் மதநல்லிணக்கம்: இந்துக் கோயில் அமைக்கும் பணியில் முஸ்லிம்கள்.!


மதக் கலவரம் மிக்க உ.பி.யில் நல்லிணக்கத்தை தூண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் ஷாஜஹான்பூரில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இரு முஸ்லிம் கலைஞர்கள் சிற்பப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் முக்கிய மாநிலமாகக் கருதப்படும் உ.பி.யில் அடிக்கடி மதக் கலவரம் நிகழ்வது சாதாரண விஷயமாக உள்ளது. 


அரசியல் லாபத்திற்காக பல சமயம் திட்டமிட்டு உருவாக்கப்படும் மதக் கலவரங்களும் அதிகம். 

இதனால், அடுத்து வருடம் உ.பி. சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் முராதாபாத், அலிகர், ஆக்ரா,

 மதுரா மற்றும் முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மதக் கலகத்திற்கானப் பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில், உபியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷாஜஹான்பூரின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு துர்கை அம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 


இதன் சுவர்களில் அமைக்கப்பட்டு வரும் சிற்ப வேலைகளில் இரு முஸ்லிம் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங் நகரை சேர்ந்த முகம்மது யாசின்(25) மற்றும் சாஜித் கான்(26) ஆகியோர் ஆவர். இந்த நிகழ்ச்சி குறித்த செய்திகள் உபியின் ஒரு மதநல்லிணக்க உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஷாஜான்பூர்வாசியான ராஜீவ் குப்தா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் கோயிலில் நுழையும் பொழுது இரு முஸ்லிம் இளைஞர்களும் படிகளை தொட்டு வணங்குகின்றனர். 


ரம்ஜான் மாதம் என்பதால் அவர்கள் நோன்பு இருந்தபடி தலையில் தொப்பிகளையும் அணிந்தவாறு பணியாற்றுவது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது.’ எனத் தெரிவிக்கிறார்.

இங்கு பணியாற்றி வரும் முகம்மது யாஸின் கூறுகையில், ‘கடந்த ஐந்து வருடங்களாக உ.பி.யின் பல கோயில்கள் மற்றும் மசூதிகளிலும் சிற்ப வேலைகள் செய்துள்ளோம். 


இந்த இரண்டுமே ஒரு புனித இடங்கள் என்பதை தவிர வேறு எந்த வித்தியாசமும் எங்களுக்கு தெரியவில்லை. 

ஒவ்வொரு மதத்தின் மீது மனிதர்களின் உணர்வுகள் ஒன்றி இருப்பதால் அவை எதுவாக இருந்தாலும் மதிப்பது எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.

 எங்கள் குர் ஆனில், குறிப்பிட்டுள்ளபடி யாரையும் புண்படுத்துவதாமல், மனித உணர்வுகளை மதித்து வருகிறோம்.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், முஸ்லிம்கள் இந்துக்களின் பணியில் ஈடுபடுவது முதன் முறையல்ல. 


அலிகர் மற்றும் முராதாபாத்தில் தயாராகும் வெள்ளியிலான இந்துக்கடவுள்களின் சிலைகள் மிகவும் புகழ் பெற்றவை.

 உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் இவை விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த பணியில் கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலானவர்களாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.