Breaking News
recent

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி: கேரளாவை சேர்ந்த பார்வையிழந்தவர் ரூ.50 லட்சம் வெல்வாரா?


துபாயில் நடைபெற்றுவரும் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ள கேரளாவை சேர்ந்த பார்வையிழந்தவர் ரூ.50 லட்சம் முதல்பரிசை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடையே மேலோங்கி உள்ளது.

துபாய் நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் மறைந்த ‘ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்’ பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 

இதற்காக நடத்தப்படும் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த வருடப் போட்டியில் பத்து வயதே நிரம்பிய நேபாளைச் சேர்ந்த ஷேக் முஹம்மது வசீர் அக்தர்தான் மிகவும் இளையவர். நெதர்லாந்தைச் சேர்ந்த பிலால் எல் இமானி(25) என்பவர்தான் இப்போட்டியில் பங்குபெறும் மூத்த வயதுக்காரர். 

இதில் 81 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிப் பெற்று, இதுவரை 41 பங்கேற்பாளர்களின் அமர்வுகள் முடிவடைந்துள்ளன.

பார்வைத் திறனற்ற இருவரும் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹா மஹ்பூப் வரிக்கோட்டில். மற்றொருவர், பனாமா நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் சலீம் பட்டேல்.

திருக்குர்ஆன் மனனப்போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு இரண்டரை லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் ரூபாய்) ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற 19-வது சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த பைசல் முஹம்மது அல் ஹார்த்தி என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் கேரளாவை சேர்ந்த பார்வை திறனற்ற முஹம்மது தாஹா மஹ்பூப் முதல்பரிசான இரண்டரை லட்சம் திர்ஹத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடையே மேலோங்கி உள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.