Breaking News
recent

மரணத்திற்கு பின்னரும் 30 நிமிடங்கள் துடித்த முகமது அலியின் இதயம்.!


முகமது அலி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவருடைய இதயம் அடுத்த 30 நிமிடங்களுக்கு துடித்ததாக அவருடைய மகள் ஹானா தெரிவித்துள்ளார். குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி,74 நேற்று முன்தினம் காலமானார். 

உலகம் முழுவதும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகமது அலி கடந்த 34 ஆண்டுகளாக பார்க்கின்சன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவித வாத நோயாகும். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாச கோளாறு ஏற்படவே, முகமது அலி பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.

பொதுமக்கள் அஞ்சலி 
முகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு
வரும் 10ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 

இறுதிச் சடங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

மகள் உருக்கம் 
முகமது அலி மரணத்தின் போது என்ன நேர்ந்தது என்று அவரது மகள்களில் ஒருவரான ஹனா அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம்.

துடித்த இதயம்
பிரார்த்தனையும் செய்தோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த பின்னரும் கூட இதயம் மட்டும் துடிப்பை நிறுத்தவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இதயம் துடித்துக் கொண்டு இருந்தது.

வலிமையான மனிதர் 
இது அவரது உடல் வலிமையை காட்டுவதாக இருந்தது. அவரை போன்ற ஒரு மாமனிதரை ஒரு போதும் பார்க்க முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

நோயுடன் பல ஆண்டுகளாக போராடிய முகமது அலியின் மரணத்திற்குப் பின்னரும் அவரது இதயம் 30 நிமிடங்கள் துடித்தது என்பதைக் கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.