Breaking News
recent

பாகிஸ்தானில் அதிசய, சூரிய குழந்தைகள் (photos)


பாகிஸ்தானில் பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் இரு சகோதரர்கள் சூரியன் மறைந்தபின் கண்திறந்து பார்க்கவோ, பேசவோ, சாப்பிடவோ முடியாத வினோத வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள பரிதாப நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் குவெட்டா நகரின் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது ஹாஷிம். மிக நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொண்ட இவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன.

எஞ்சியுள்ள நான்கு குழந்தைகளில் இருவர் நல்லநிலையில் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால், சோய்ப் அக்தர்(13) மற்றும் அவனது தம்பியான அப்துல் ரஷீத்(9) மட்டும் இனம்புரியாத ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலையில் பொழுது புலர்ந்ததும் சுறுசுறுப்பாக படுக்கையை விட்டு எழுந்து, மாலைவரை துள்ளிக் குதித்து, துடிப்புடன் சுட்டித்தனத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்த சகோதரர்கள், மாலையில் சூரியன் மறைந்த பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைப் போல் கட்டிலில் விழுந்து கிடக்கின்றனர்.

மறுநாள் காலைவரை இவர்களால் கண்களை திறக்கவோ, பேசவோ, சாப்பிடவோ முடிவதில்லை. அசைவற்ற நடைப்பிணங்களைப் போல் இரவு முழுவதும் இப்படியே கிடக்கும் இவர்கள், மறுநாள் பொழுது புலர்ந்ததும் சகஜநிலைக்கு திரும்பி விடுகின்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் இவர்களின் தந்தையான முஹம்மது ஹாஷிம், சூரியனில் இருந்து கிடைக்கும் சக்தியால் மட்டுமே இவர்கள் உயிர் வாழ்ந்து வருவதாக குறிப்பிடுகிறார். ஆனால், சிறுவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கருத்தை மறுத்து வருகின்றனர்.

ஒரு இருட்டறைக்குள் அடைத்து வைத்திருந்தாலும், சூரியன் எட்டிப்பார்க்க முடியாத மழைநாட்களிலும்கூட பகல் நேரத்தில் இந்த சிறுவர்கள் துடிப்பாக செயல்படுகின்றனர் என்பதை அறிந்து வைத்துள்ள டாக்டர்கள், அவர்களை பாதித்துள்ள வினோத நோய் என்ன? என்பதை கண்டறியும் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்துவகை உயர்தர சிகிச்சைகளையும் இலவசமாக அளிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுவர்களின் ரத்தம் உள்ளிட்ட சில மாதிரிகளை சேகரித்துள்ள பாகிஸ்தான் டாக்டர்கள், அவற்றை பரிசோதனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.