Breaking News
recent

திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவைக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) உழைப்பு.!


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத்திலுள்ள இந்தியத்தூதரகத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்பதை தாங்கள் நன்கு அறிவீர்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அர்ப்பணிப்பு உழைப்புகளை குறிப்பாக குவைத் வாழ் தமிழர்கள் நன்கு அறிவர். இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இறைவனுடைய மாபெரும் கிருபையால் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு சமூகப்பணிகளை குவைத்தில் மேற்கொண்டு வருகிறது.

இவற்றுள் முக்கியமான ஒன்று,
திருச்சிராப்பள்ளி - குவைத்திற்கான நேரடி விமானசேவையாகும்.
ஏற்கனவே திருச்சிராப்பள்ளி - குவைத் இடையில் வாரத்தின் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விமானசேவை இந்தியன் ஏர்லைன்ஸ் IC 993 மற்றும் IC 995 ஆல் வழங்கப்பட்டு வந்தது. 

இச்சேவைகள்,இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இணைப்பினை காரணம் காட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர்,
குவைத் வாழ் தமிழர்களின் கடும் எதிர்ப்பினை மீறியும் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவைக்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் உழைப்பு அளப்பறியது.

குறிப்பாக கடந்த ஓராண்டாக இதற்கான உழைப்பினை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,
குவைத்தில் உள்ள இந்தியத் தூதர் மரியாதைக்குரிய "சுனில் ஜெயின்" அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டு,அவர் மூலம்,இந்தியப் பிரதமர்,இந்திய ஜனாதிபதி,மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகம்,ஏர் இந்தியா,ஜெட் ஏர்வேஸ் மற்றும்தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுஆகியோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் மட்டும்,திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவையின் வணிகரீதியிலான வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கருதுவதால் தற்போது வாய்ப்பு இல்லை என்றும் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது முன்னுரிமை தருவதாக ஒரு பதிலைத் தந்தது.

குவைத்திற்கான இந்தியத் தூதர் மரியாதைக்குரிய "சுனில் ஜெயின்" அவர்களும்,குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நியாயமான,
கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குவைத் வாழ் தமிழர்களின் உடனடியான தேவை சார்ந்த விசயமாக இருப்பதால்,அவர்களின் முழு ஆதரவையும் இன்றளவும் கொடுத்து வருகின்றார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றார்.

அதேபோல் குவைத் அரசின்,அரசு சார்ந்த குவைத் ஏர்வேஸிடமும்,
குவைத்தின் மற்றொரு தனியார் விமானநிறுவனமான ஜஜீரா ஏர்வேஸிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு அவர்கள்,
திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவையானது,
இருநாடுகளுக்கிடையேயான 

(இந்தியா மற்றும் குவைத்) விமானத்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ( Bilateral Air Services Agreement - BASA)
மற்றும் இந்திய அரசின் பறக்கும் அனுமதி (Point of Call - PoC),
இருக்கைகள் அனுமதி (Seat capacity) உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் உள்ளடக்கியது என்றும்,நிச்சயம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் நம்பிக்கை கூறினர்.

இதன் தொடர்ச்சியாக,இந்திய நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் கோரிக்கைக்கான நிலைக்குழுத் தலைவர்,
நாடாளுமன்ற உறுப்பினர்,ராஜ்யசபை உறுப்பினர்,

Parliament Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice) மரியாதைக்குரிய "டாக்டர். E.M.சுதர்சன நாச்சியப்பன்" அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஏனெனில்,2005 முதல் 2007 வரையிலான காலகட்டங்களில்,
கோழிக்கோடு பன்னாட்டு விமானநிலையத்திற்கு, "பொதுமக்கள் கோரிக்கை" என்ற அடிப்படையிலேயே வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமானநிறுவனங்களுக்கு கோழிக்கோடு விமானநிலையத்திற்கு சேவை வழங்க பறக்கும் அனுமதி (PoC) மத்திய அரசால் தரப்பட்டது.

கோழிக்கோடு பன்னாட்டு விமானநிலையத்திற்கு எந்த அடிப்படையிலோ அதேஅடிப்படையில்திருச்சிராப்பள்ளிபன்னாட்டுவிமானநிலையத்திற்கும் வளைகுடா நாடுகளைச்சேர்ந்த விமானநிறுவனங்களுக்கு சேவை வழங்க அனுமதி (PoC) தரவேண்டும் 

என்ற அடிப்படையில் நாடாளுமன்ற பொதுமக்கள் கோரிக்கைக்கான நிலைக்குழு தலைவர்,மரியாதைக்குரிய டாக்டர் E.M.சுதர்சன நாச்சியப்பன் எம்பி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

நமது கோரிக்கையை கவனமாக கேட்ட எம்பி அவர்கள் உடனடியாக தேவையான முயற்சியையும் மேற்கொண்டார்.
(டாக்டர் E.M.சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கடுமையான,
அர்ப்பணிப்பான உழைப்பு மிகவும் போற்றுதலுக்குரியது. இதுபற்றி அடுத்து தனியாக பதிவிடுகிறோம்).

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பில் கொடுத்த கோரிக்கையைப் பெற்றுக்கொண்ட டாக்டர் .E.M.சுதர்சன நாச்சியப்பன் எம்பி அவர்கள் உடனடியாக, மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு நமது கோரிக்கைகளை அனுப்பிவைக்கிறார்.
எம்பி அவர்களின் கோரிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

(இத்துடன் திருச்சியைச் சார்ந்த தன்னார்வல அமைப்பான TIDES அமைப்பின் கௌரவத் தலைவர் பெரியவர் ஆச்சர்சிங் சார்பாகவும் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை அளிக்கப்பட்டது. இதுபற்றி பின்னர் விரிவாகக் காண்போம்)

நமது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கோரிக்கைக்கு,
எம்பி டாக்டர். E.M.சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு,மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சார்பில்,அத்துறையின் அமைச்சர் திரு.அசோக் கஜபதி ராஜு அவர்கள்,சம்பந்தம் துளி கூட இன்றி ஒரு பதிலையும் அனுப்புகிறார். அப்பதிலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பதிலானது,மத்தியஅரசு,திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தின் முக்கியத் தேவையை,ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குவைத் வாழ் தமிழர்களின் தேவையை வேண்டுமென்றே,பிற தனியார் விமானநிலையங்கள் பயன்பெறும் வகையில் புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது.

நடப்புத் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இதன் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி மரியாதைக்குரிய எம்பி டாக்டர் E.M.சுதர்சன நாச்சியப்பன் அவர்களிடம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கலந்து ஆலோசிக்க உள்ளது.

மேலும் நமது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் பலனாக,திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவைக்கான மத்திய அமைச்சகத்தின் நெறிமுறைகள் - Procedures கிடைக்கப் பெறறுள்ளன.

(இதன் அனைத்து Procedure களும் பொதுவெளியில் விவாதிக்கத் தக்கவை அல்ல என்பதால் அவற்றை விட்டுவிடுவோம்).
மேலும்,புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி (BASA & PoC),
குவைத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி நேரடி விமானசேவைக்கு,
குவைத் ஏர்வேஸ் தான்இந்திய, மத்தியஅரசின் சிவில் விமானப்போக்குவரத்துத் துறையிடம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது நெறிமுறையாகும்.

எனவே,குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கமானது,
குவைத் ஏர்வேஸை,திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு சேவை வழங்க முறைப்படி விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக,குவைத் ஏர்வேஸின் முதீர்கள்,
மரியாதைக்குரிய "பவாஜ் அப்துல் அஜீஜ் அல் பராஹ்" அவர்களிடமும்,
மரியாதைக்குரிய "எஞ்சினியர். யூசெப் சுலைமான் அல் பவ்ஜான்" அவர்களிடமும் நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.

இறைவன் நாடினால்,இம்மாத இறுதிக்குள் நமது சங்கத்திற்கு அனுமதி கிடைக்கும். சென்ற மாதமே சந்தித்திருக்க வேண்டியது. சில நடைமுறைக் காரணங்களால் தள்ளிப்போயுள்ளது.
அதேபோல்,மத்தியஅரசின் பாராமுகம் மட்டுமே இன்றுவரை,
திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவை இல்லாததற்கு காரணம் ஆகும்.

ஆனாலும்,திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவை கிடைக்கும் வரையிலும்,குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் உழைப்பு தொடரும்.
இன்ஷா அல்லாஹ்.

குவைத் வாழ் தமிழர்களும், மற்றவர்களும் திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவை உழைப்புக்கு தங்கள் ஆக்கப்பூர்வ பங்களிப்பை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நமது நியாயமான திருச்சிராப்பள்ளி - குவைத் நேரடி விமானசேவை என்ற தேவையை எல்லாம் வல்ல இறைவன் கூடிய விரைவில் பூர்த்தி செய்வானாக!.
ஆமீன்.!






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.