Breaking News
recent

ஹஜ் குறித்து பேச, ஈரான் குழு சவூதி அரேபியா பயணம்.!


இழுபறி நீடிக்கும் ஹஜ் யாத்திரை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தூதுக்குழு ஒன்று சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையில் நீடிக்கும் இராஜதந்திர முறுகலால் ஈரான் நாட்டவர் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபடுவது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சவூதி ஹஜ் அமைச்சரின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆறு பேர் கொண்ட தூதுக்குழு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை சவூதிக்கு புறப்பட்டுச் சென்றதாக ஈரானின் ஹஜ் அமைப்பின் தலைவர் ஒஹதி அந்நாட்டின் இர்னா செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். 

இரு தரப்புக்கும் இடையில் ஜித்தாவில் நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மறுபுறம் ஈரான் பரிந்துரைத்திருக்கும் ஹஜ் உடன்படிக்கையை சவூதி அரேபியா ஏற்றிருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்மூலம் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈரானியர் பங்கேற்க முடியுமாக இருக்கும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

எனினும் ஈரான் கலாசார அமைச்சர் அலி ஜென்னத்தி கடந்த மே 12இல் வெளியிட்ட அறிவிப்பில், ஹஜ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் ஈரானியருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு மக்கா செல்ல முடியாதிருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலைக்கு சவூதி மீதும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த மாதம் இடம்பெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கவில்லை.

 எனினும் கடந்த ஜனவரியில் ஷியா மற்றும் சுன்னி போட்டி நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் முறிந்த பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பாக இது அமைந்தது. 

சவூதி அரேபியா ஷியா மதத்தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சவூதி தூதரகம் தாக்கப்பட்டதை அடுத்து ஈரானுடனான இராஜதந்திர உறவை சவூதி முறித்துக் கொண்டது.

சவூதி அரேபியா ஈரானிய ஹஜ் யாத்திரிகர்களுக்கு மூன்றாவது நாட்டின் மூலம் விசா வழங்குவது மற்றும் யாத்திரிகர்கள் ஈரான் விமானத்தினூடாக பயணிக்க அனுமதிக்காதது தொடர்பிலேயே ஈரான் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. 

பதிலாக டுபாய் ஊடே ஈரானியருக்கு விசா விநியோகிக்க சவூதி வலியுறுத்தி வருகிறது.

எனினும் ஈரான் ஹஜ் கடமையின்போது சொந்த ஆன்மீக வழிபாடுகளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுப்பதாக சவூதி தரப்பு குறிப்பிடுகிறது.

பிராந்தியத்தின் பிரச்சினைகளில் ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் முறுகள் நீடிக்கிறது. குறிப்பாக சிரியா மற்றும் யெமன் யுத்தங்களில் இரு நாடுகளும் எதிர் எதிர் தரப்புகளுக்கு அதரவளித்து வருகின்றன. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.