Breaking News
recent

முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் இணையவழி கையடக்க கம்ப்யூட்டர் அறிமுகம்.!


தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க இணையவழி கையடக்க கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 

இவர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம்  மானிய விலையில் அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில், சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. 

ரேஷன் கடைகளுக்கு அரசு 80 சதவீத பொருட்களை மட்டுமே ஒதுக்கீடு செய்வதால் பெரும்பாலான கார்டுகளுக்கு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களில் எடை குறைவு,  லோடுமேன்கள் டிப்ஸ் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டுவதற்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கே தெரியாமல் அவர்கள் நுகர் பொருட்களை வாங்கியதாக கார்டு மற்றும் பதிவேடுகளில் பதிவு செய்தும், பொருட்கள் இருப்பு இருக்கும் போதே தீர்ந்து விட்டதாக கூறியும் சில ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க  தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இணையவழி கையடக்க கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளது. இதில் ரேஷன்கார்டு தாரர்களின் ஆதார் எண், ரேஷன்கார்டு எண், செல்போன்  எண்கள் உள்ளிட்டவை கடந்த 3 மாதமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. 


இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கும்போது அது குறித்த விவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். 

இதன்மூலம்  முறைகேடாக பதிவு செய்து பொருட்களை வெளி இடங்களில் விற்பது தடுக்கப்படும். மேலும்  ஒவ்வொரு பொருட்களின் இருப்பு விபரத்தையும் எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த புதிய தொழில் நுட்பத்தால் தமிழகம் முழுவதும் ரேசன்கடைகளில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.