Breaking News
recent

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அதிகபட்ச அபராதம்.!


உங்கள் சிறுவயது மகனுக்கோ, மகளுக்கோ ஸ்கூட்டர் பரிசளிக்க விரும்புகிறீர்களா? இனி இருமுறை யோசிக்கவும்.

சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் மிக அதிகபட்ச அபராதம் விதிக்க, மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவரும், ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அமைச்சருமான யூனுஸ் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பெங்களூருவில் வெள்ளிக்கிழமையன்று கூடிய இரண்டாவது கூட்டத்தில், அமைச்சர்கள் குழு போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மேலாண்மைக்காக தனி அமைப்பை ஏற்படுத்துதல், சாலைப்பாதுகாப்புக்காக மத்திய சாலை நிதியிலிருந்து 10 சதவீதம் ஒதுக்குதல், பாதசாரிகள் மற்றும் இயந்திரமற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அதிகபட்ச அபராதம், மூன்று முறைக்கு மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தீவிர குற்றமிழைத்தால் 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல் ஆகிய பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் குழுவின் மூன்றாவது கூட்டம் அடுத்த மாதம் இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் சாலைத் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.