Breaking News
recent

மதிப்பெண் குறைந்தாலும் கவலை வேண்டாம் .!


பிளஸ்2வில் 45 சதவீதம் முதல் 60 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்ததைவிட வாழ்க்கையில் சாதிக்க பல்வேறு  புதிய படிப்புகள் வந்துவிட்டன. 

இன்ஜினியரிங் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பிரிவில் பொதுப்பிரிவினர் 60 சதவீதம்,  பிற்பட்டோர் 55 சதவீதம், மிகவும் பிற்பட்ட மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு  ஆகியிருந்தால் மட்டும் போதுமானது. 

இதுதான் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான விதிமுறை. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிமுறையின்படி, பிளஸ்2வில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும் இன்ஜினியரிங் படிக்க முடியும். 

 இதனால், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தகுதி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயித்துள்ளன. 

இந்நிலையில், இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இன்ஜினியரிங் பிரிவில் சேர வாய்ப்பு  உள்ளது.

ஆனால், பிளஸ்2 படிப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கல்லூரியில் எடுக்கும் மதிப்பெண்ணும் மாறுபட்டவை. எனவே, பிளஸ் 2விற்கு பின்  தேர்வு செய்யும் பாடத்தில் அக்கறையுடன் படித்து முடித்தால் மட்டுமே அடுத்து வேலைக்கு போவது மிக எளிதாக இருக்கும். 

குறைந்த மதிப்பெண்  பெற்றவர்கள் கீழ்கண்ட பாடப்பிரிவுகளை எடுத்தால் வேலைக்கு செல்வது என்பது எளிதாக இருக்கும். ஓட்டல் நிர்வாகம், கேட்டரிங் துறை படிப்பு:  இத்துறையில் படித்து முடித்தவுடன் ஓட்டல் துறையில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளன. 

வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும்,  விரும்பும் எந்த பகுதியிலும் வேலை பார்க்க முடியும் என்பது சிறப்பம்சம். திறமைக்கேற்ற சம்பளம் கிடைக்கிறது. 

வெளிநாட்டிற்கு செல்ல நினைப்பவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சுற்றுலா நிர்வாகம்: சுற்றுலா  துறையில் பயின்ற மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது. மருத்துவ சுற்றுலாவும் தற்போது அதிகரித்துவிட்டதால் சுற்றுலா பயணி தொடர்பான  நிர்வாக பணிகள் அதிகரித்துள்ளன. 

அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு படிப்பு: விளம்பர  துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. விளம்பர வாசகங்கள் எழுதுவது முதல் அதை கண்ணைக்கவரும் வகையில் டிசைன் செய்வது வரை  ஏராளமான துறைகள் உள்ளன. இதில் மாணவருக்கு ஆர்வம் உள்ள துறையை தேர்வு செய்யலாம். 

விஷூவல் கம்யூனிகேஷன், பிலிம் டெக்னாலஜி: இன்று அதிகரித்துவிட்ட தொலைக்காட்சிகளால் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு  வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. விளம்பர துறையிலும் மீடியா துறையிலும் உள்ள தேவைகளும் அதிகரித்துவிட்டதால் வேலைவாய்ப்பு சிறப்பாக  உள்ளது. 

ஒரு திரைப்படத்துக்கு பின் தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாளர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். பிலிம் டெக்னாலஜி  முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்புகள், அனுபவத்துக்கு ஏற்ப சம்பளம் என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

 பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்,  பி.சி.ஏ: இன்றைய உலகம் கம்ப்யூட்டரை சார்ந்து இருப்பதால், இத்துறையில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.  நன்றாக படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைபார்க்கும் வாய்ப்பு உள்ளது. 

போட்டோகிராபி, வீடியோகிராபி: இன்றைய மீடியா உலகில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபியின் தேவை அதிகரித்துவிட்டது. அதிகரித்துவிட்ட  பத்திரிகைகள், தொலைக்காட்சி எண்ணிக்கை மற்றும் சி.டியில் வெளியிடப்படும் போட்டோ தொகுப்பு ஆர்ட் போட்டோகிராபி என்று துறையில் ஆர்வம்  உள்ளவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 

பாராமெடிக்கல்: நர்சிங் (ஆண், பெண் இருபாலருக்கும்) லேபரேட்டரி டெக்னாலஜி படிப்புகள் நல்ல  வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கவும் முடியும். மருத்துவ மனைகளில் இவர்களுக்கான  வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.