Breaking News
recent

கின்னஸ் சாதனைக்காக போராடும் பாலஸ்தீன சிறுவன் முகமது அல் ஷேக்.!


பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயல்களால் ‘ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படுகிறார்.

கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குத் தன்னுடைய கை, கால்கள், உடலை வளைக்கிறார். கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார்.

உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார். 4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர் முகமது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே இவரின் தற்போதைய லட்சியம். 2014-ம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதல்களில் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதல்கள் நடைபெற்று 50 நாட்களில் முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

உடல் வளைப்பு போட்டியில் 1.4 கோடி வாக்குகள் பெற்றார் முகமது! தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, முகமது போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இதுவரை இல்லை. 

ஒரு நிமிடம் நெஞ்சு மூலம் மொத்த உடலையும் நிற்க வைக்கும் சாதனையை கின்னஸுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

 ’’முகமது ஏற்கெனவே உலக சாம்பியன் ஆகிவிட்டான். முகமதுவின் சாதனைகள் மகிழ்ச்சி அளித்தாலும் குதிரை, ஒட்டகங்கள் மீது அவன் நிகழ்த்தும் சாகசங்கள் என்னைக் கவலைப்பட வைக்கின்றன’’ என்கிறார் முகமதுவின் அம்மா ஹன்னா.

‘’என் திறமைகளை உலகம் முழுவதும் சென்று வெளிப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் எல்லா எல்லைகளும் எங்களுக்கு மூடப்பட்டுவிட்டன. 

உலகம் முழுவதும் உள்ள அரபு மக்கள் இணையம், ஃபேஸ்புக் மூலம் வீடியோக்களைப் பார்த்துதான் எனக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு எனக்கு வெளிநாடுகளில் தங்கி, பயிற்சி எடுத்துக்கொள்ளவும் போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நான் சிறுவன் என்பதால் என் குடும்பத்தினர் அதை அனுமதிக்கவில்லை. கின்னஸ் என் சாதனையை ஏற்றுக்கொண்டுவிட்டது. 

விரைவில் முறையான அறிவிப்பு வரும்’’ என்று காத்திருக்கிறார் முகமது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.