Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்.!


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இது குறித்து கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

638 வாக்குச்சாவடிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் என 2 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் தொகுதியில் 13 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தல், தேர்தல் செலவின பதிவேடுகளை பராமரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 638 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு குடிநீர், மயக்கம் ஏற்படாமல் தடுக்க எலக்ட்ரால் பவுடர், மின்விசிறி, மின்விளக்கு, 

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க சாய்வு பாதை (ராம்ப்), கோடை வெயிலுக்காக சாமியானா பந்தல் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. 

பூத் சிலிப் 

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் 296 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் நிறுத்தப்பட உள்ளன. 

மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து வாக்களிக்க செய்ய போதிய அளவு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வீடியோ கண்காணிப்பிற்காக 2 குழுவினர் உள்ளனர். தற்போது மேலும் 2 குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 

நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் சீட்டு வழங்குவார்கள். 

அதனை உரிய காலத்தில் பெற இயலாதவர்கள் தங்களது வாக்காளர் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 16 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க முடியும். 

மோட்டார் சைக்கிளில் பணம் கொண்டு செல்லக்கூடாது

பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக 4 ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அந்த ஏஜென்சிகளை சேர்ந்த ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் பல லட்சம் ரூபாயை சாதாரணமாக எடுத்து செல்கின்றனர். 

உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்கள் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இனி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள், பாதுகாப்பு கருதி பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லக்கூடாது 

என்றும், அவ்வாறின்றி மீறிச்சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பணியில் 450 உள்ளூர் போலீசார்

தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர்களும் சேர்ந்து பணியாற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், 

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 தேர்தல் பறக்கும் படைகளில் மத்திய அரசில் பணியாற்றும் 2-ம் நிலை அலுவலர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் பணம் உடனே சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 450 உள்ளூர் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி. மற்றும் பட்டாலியன் வீரர்கள் ஈடுபட உள்ளனர். 

இது தவிர மத்திய துணை ராணுவம் 2 கம்பெனியினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

நடவடிக்கை 

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களிலும், வாக்குசீட்டிலும் வேட்பாளர் பெயர், சின்னங்களுடன், அவர்களது புகைப்படமும் இடம்பெறும். 

தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றும் அலுவலர்கள் பாரபட்சம் இன்றி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதனை மீறி பாரபட்சமாக நடக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மது அருந்தி விட்டு வந்து பிரச்சினையில் ஈடுபடுவோர், 

மது அருந்தாமல் வந்து பிரச்சினைகளில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.