Breaking News
recent

தலைக்கு 300 ரூபாய் கொடுத்தும் வராத தமிழ்நாட்டு மக்கள்.!


மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் அமைச்சர்களும், தலைவர்களும் தமிழ்நாட்டை சுற்றி வலம் வந்தாலும், மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லாததால் நொந்து போயுள்ளனர்.

 இந்நிலையில், 'இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் கட்சி எங்கே வளரும்?' என்று மோடி வேறு கடுகடுப்பு காட்டியதால் அதிர்ந்து போயுள்ளனர்.

பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் என பா.ஜ.கவின் பிரபல முகங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி வருகின்றன. 

தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரமும் செய்கின்றனர்.

கடந்த 6-ம் தேதி சென்னை, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் மோடி. 'நாட்டின் பிரதமர் பேசும் கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்தால் நன்றாக இருக்காது' 

எனக் களத்தில் குதித்த பா.ஜ.க தொண்டர்கள், தலைக்கு 300 ரூபாய் என செலவு செய்து ஆட்களைக் கூட்டி வந்தனர். மைதானம் முழுவதும் 25 ஆயிரம் நாற்காலிகளைப் போட்டு வைத்திருந்தனர்.

 ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மோடி பேச ஆரம்பித்ததும், பாதி பேர் எழுந்து போய்விட்டனர். 'அவர் பேசும் இந்தி மொழியைக் கேட்க நம்மவர்கள் ஆர்வம் காட்டவில்லை. 

ஆங்கிலத்தில் பேசியிருந்தால்கூட ஓர் அளவுக்கு கூட்டம் இருந்திருக்கும்' என வேதனைப்பட்டார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

தொடர்ந்து அவர், " மேடையை விட்டு மோடி இறங்கியதும் கோபமாக இருந்தார். மேடைக்கு அருகில் வைத்தே தமிழக பொறுப்பாளர்களிடம்,

இந்தியா முழுவதும் எனக்கென்று உள்ள குட் வில் ( Good will) லை உங்களுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை. 

சரியாகத் திட்டமிட்டிருந்தால் நல்ல எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை நம்மால் பெற்றிருக்க முடியும். 

அதைச் செய்ய தமிழக பா.ஜ.க தவறிவிட்டது' என விமர்சித்துள்ளார். அவர் சொல்வதை மவுனமாகக் கேட்டுக் கொண்டார்கள் தமிழிசை, இல.கணேசன், முரளிதர்ராவ் உள்ளிட்டோர். 

அதேபோல், அமித் ஷாவும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தன்னுடைய வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிர்வாகிகளிடம் பேசும்போது, 'நாடாளுமன்றத் தேர்தலின்போது நம்முடன் இருந்த கூட்டணிகளை உடையாமல் கொண்டு சென்றிருந்தால், இவ்வளவு இக்கட்டான நிலை வந்திருக்காது. 

கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பையும் வலுப்படுத்தவில்லை. இத்தனை கோஷ்டிகளாக பிரிந்து கிடந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது? உங்களுக்கெல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமே கிடையாதா?'  எனக் கொந்தளித்தார்.

அமித் ஷாவின் கோபத்தை நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரதமருக்கும் தலைவருக்கும் உள்ள கோபமே, விஜயகாந்தை கூட்டணிக்குள் வைத்துக் கொள்ளாததுதான். 

இதைப் பற்றிக் கேப்டனே ஒருமுறை பேசும்போது, 'பா.ஜ.கவினர் என்னிடம் வந்து பேசவில்லை. பிரதமர் வந்தாலும் ஜெயலலிதாவைப் பார்க்கிறார். என்னைப் பார்ப்பதில்லை' எனக் கூறியிருந்தார்.

அவருடைய பேச்சுக்கு செவிசாய்த்திருந்தால் தேர்தலை தைரியமாக எதிர்கொண்டிருக்கலாம்.

 தமிழிசை மீதும் முரளிதர் ராவ் மீதும் அகில இந்தியத் தலைமை கோபத்தில் இருக்கிறது. 

இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட பா.ஜ.க வெற்றி பெறாவிட்டால், தலைமையின் கோபம் எப்படித் திரும்புமோ? என அச்சத்தில்தான் இருக்கிறார்கள். 

நல்ல கூட்டணியை அமையவிடாமல் கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் இருக்கிறது தேசியத் தலைமை" என ஆதங்கப்பட்டார் நம்மிடம்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூடிய கூட்டத்தை எதிர்பார்த்து வந்த மோடி, கடுகடுத்தபடியேதான் டெல்லிக்குப் போனார். 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கமலாலயத்தில் எந்த மாதிரியான பட்டாசு வெடிக்கப் போகிறது? எனக் காத்திருக்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள்.

-ஆ.விஜயானந்த் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.