Breaking News
recent

2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து.!


கடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சர்வதேச பருவநிலை மாறுபாடு என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடரை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல், மாசு அதிகரிப்பு, நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2050-ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இதனால் சீனா, இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடல் மட்ட அதிகரிப்பால் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற கடலோர நகரங்களில் வசிக்கும் சுமார் 4 கோடி பேர் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை அழித்து நகரமயமாக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் காடுகளை வளர்ப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐ,நா.வின் ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.