Breaking News
recent

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது : 1195 மதிப்பெண்கள் பெற்று இருவர் முதலிடம்.!


பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், ஜஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜஷ்வந்த்தும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண்கள் விவரம் ; தமிழ் - 199, ஆங்கிலம் - 197, கணிதம் , உயிரியல், வேதியல் - 200, இயற்பியல் - 199.

இரண்டாம் இடம்:


1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

மூன்றாம் இடம்;

1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதில் நாமக்கல் S.K.V பள்ளி மாணவி வேணுபிரீத்தா 1,193  மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். 

தேர்ச்சி விகிதம்: 


இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

கணிதம்:

கணித பாடத்தில் மாநிலம் முழுவதும் 3,361 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

வேதியியல்:

வேதியியல் பாடத்தில் மாநில அளவில் 1,703 பேர் 200 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

இயற்பியல்: 

இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 5 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

விலங்கியல்;

விலஙகியல் பாடத்தில் மாநில அளவில் 10 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

உயிரியல்:

உயிரியல் பாடத்தில் மாநில அளவில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

தாவரவியல்:
தாவரவியல் பாடத்தில் 20 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிக கணிதத்தில் 1,072 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணினி அறிவியல்;


கணினி அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு 303 பேர் 200க்கு 200 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

வணிகம்;

வணிகப் பாடத்தில் 3804 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



இதர மொழியில் முதல் 3 இடம் பெற்றவர்கள்:

தமிழ் அல்லாத மொழியை முதல் பாடமாக கொண்டு படித்தவர்களில் சத்ரிய கவின் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி ஸ்ருதி 1,194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், மாணவர்கள் சம்ரிதா, நவீன், நிவேதிதா ஆகியோர் 1,193 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு நடந்து முடிந்தது.  இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ, மாணவியர் எழுதினர்.


 பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 91  ஆயிரத்து 806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 பேர் மாணவியர். மாணவர்களைவிட 50,085 மாணவியர் கூடுலாக தேர்வு எழுதியுள்ளனர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோர் தவிர தனித் தேர்வர்களாக 42,347 பேர் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர சிறைக் கைதிகள் 97 பேர் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர். 

இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர். இந்நிலையில் 19ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பிறந்த தேதி, தேர்வுப் பதிவெண் ஆகிய விவரங்களை புகுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


இது தவிரவும் 21ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி, தேர்வு எழுதிய பள்ளி, தேர்வு மையம் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறுவது, மறு கூட்டல் செய்ய இன்றும் நாளையும் அந்தந்த தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.