Breaking News
recent

லண்டனில் ஒரு 'ஹிஜாப் அணிந்த கிக் பாக்ஸர்'.!

பிரிட்டனில் முஸ்லிம் பெண் ஒருவர் சக முஸ்லிம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிக் பாக்ஸிங் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்துவருகின்றார்.
மூன்று பிள்ளைகளின் தாயான கதீஜா சஃபாரி முவாய்-தாய்-பாக்ஸிங் தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டி பெற்றவர்.
லண்டனுக்கு அருகே, மில்டன் கீய்ன்ஸில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்திவரும் கதீஜாவிடம் பல பெண்கள் பாக்ஸிங் கற்றுவருகின்றனர்.
இப்போது 6-மாதக் கர்ப்பிணியாக உள்ளபோதிலும், தனது வகுப்புகளை அவர் தொடர்ந்தும் விடாது நடத்திவருகின்றார்.
அவரைப் போலத்தான் அவரது மாணவிகளும் ஹிஜாப் அணிந்துகொண்டு உற்சாகமாக பாக்ஸிங் கற்றுக்கொள்கின்றனர்.
இதன் மூலம், முஸ்லிம் பெண்கள் வீட்டில் இருந்துகொண்டு சமையலிலும் பிள்ளை வளர்ப்பிலும் தான் ஆர்வம் காட்டுவார்கள் என்று நிலவும் தவறான கருத்துக்களை தகர்க்கமுடியும்' என்று அவர்கள் நம்புகின்றனர்.
பிரான்ஸில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பிரிட்டனிலும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு மற்றும் தவறான அச்ச உணர்வு அதிகரித்துள்ள சூழ்நிலையில், தங்களை தற்காத்துக் கொள்ளவும் இந்த தற்காப்புக் கலை நம்பிக்கை அளிப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனில் முஸ்லிம் பெண்கள் மீதான உடல் மற்றும் வார்த்தை ரீதியான துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதை காவல்துறையும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஏனைய குழுக்களும் கூறுகின்றன.
'முன்னரெல்லாம் என்னைப் பார்த்து முஸ்லிம் என்று சிலர் வீதியில் கத்துவார்கள். நான் உடனே அழத் துவங்கிவிடுவேன். எப்படி என்னை பாதுகாத்துக் கொள்வது என்று தெரிந்திருக்கவில்லை. வீட்டை விட்டு வெளியில் செல்லவே விரும்ப மாட்டேன். இப்போது நான் அப்படி உணர்வதில்லை' என்று கதீஜாவிடன் பாக்ஸிங் கற்றுவரும் அஃப்ஷான் அசீம் என்ற தாய் கூறுகின்றார்.
லண்டனில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் 2015-ம் ஆண்டு செப்டெம்பரில் 70 வீதத்துக்கும் அதிக அளவால் உயர்ந்திருந்ததாக லண்டன் மாநகரக் காவல்துறை கூறுகின்றது.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.