Breaking News
recent

ஈகைத் திருநாள்......


முஸ்லிம்களுக்கு பெருநாள்கள் இரண்டு. முதலாவது பெருநாள், ஷவ்வால் மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிற ‘நோன்புப் பெருநாள்’. இது ‘ஈதுல் பித்ர்’ என்று அழைக்கப்படுகிறது.

 ‘ஈதுல் பித்ர்’ என்றால் ‘நோன்பை நிறைவு செய்த பண்டிகை’ என்று பொருள். ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்படுவதால் இது ‘ரமலான் பண்டிகை’ என்றும், ஏழைகளுக்கு ஈந்து மகிழ்வதால், ‘ஈகைத் திருநாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘ஈத்’ என்றால் பண்டிகை அல்லது பெருநாள். ‘ஈத்’ என்ற சொல்லுக்கு ‘திரும்ப வரக்கூடியது’ என்று அர்த்தம். வாழ்க்கையில் வசந்தமும், மகிழ்ச்சியும் திரும்பத் திரும்ப வர வேண்டும் என்ற பொருளில் இப்பெயர் வழங்கலாயிற்று.

முஸ்லிம்கள் இறைவனுக்காக தாங்கள் ஆற்றிய கடமையின் நிறைவைக் கொண்டாடுவதுதான் பெருநாளின் நோக்கமாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக கொண்டாடப்படு கிறது, நோன்புப் பெருநாள்.
ஹஜ் கடமையை நிறைவேற்றியதற்கு அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது, ஹஜ்ஜுப் பெருநாள்.

ஒரு மாத நோன்பை நிறைவு செய்த முஸ்லிம்கள், ஏழை, எளியவர்களுக்கு பெருநாளன்று தான தர்மங்கள் செய்வதன் மூலம் இறைவனுக்குத் தங்கள் நன்றியை செலுத்துகிறார்கள்.

இதுபோலவே ஹஜ் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்களும், ஏனைய ஏழைகளுக்கு ‘குர்பானி’ பொருட்களைப் பங்கிட்டுக் கொடுத்து தங்களின் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள்.

தான தர்மங்களையும், குர்பானி பொருட்களையும் வழங்குவது பெருநாட்களின் மிக முக்கியமான அம்சங்களாகும்.
இவ்வாறு நன்றி செலுத்துவது ஆன்மிக உணர்வையும், மனிதாபிமான உணர்வையும் ஒருங்கிணைக்கும் ஓர் உன்னத செயலாகும்.
நோன்பு மனிதனுக்கு சமூக உணர்வையும், ஒற்றுமை உணர்வையும், சகோதரத்துவ உணர்வையும் ஊட்டுகிறது. 

அதே உணர்வுடன் முஸ்லிம்கள் பெருநாளை பெரு மகிழ்வுடன் கொண்டாடுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு புத்தாடை அல்லது தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையைத் தொடங்குவதற்கு முன்பு ‘தக்பீர்’ சொல்ல வேண்டும். ‘தக்பீர்’ என்பது இறைவனைப் பெருமைப்படுத்தும் முழக்கமாகும்.

‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’-இதுவே தக்பீராகும்.
இதற்கு, ‘அல்லாஹ் மிகப் பெரியவன்; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை. இன்னும் அல்லாஹ் மிகப் பெரியவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்பது பொருளாகும்.

பிறை பார்த்ததும், அந்தி நேரத் தொழுகை (மக்ரிப்) முடிந்தவுடன் பள்ளிவாசல்களில் தொடங்கும் இந்த ‘தக்பீர்’ முழக்கம், பெருநாள் தொழுகை தொழுது முடிக்கும் வரை கூறப்படும்.
பெருநாள் தொழுகையை, சூரிய உதயத்திற்கும் நண் பகலுக்கும் இடையில் உள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு ‘பாங்கு’ சொல்லத் தேவை இல்லை.

பெருநாள் தொழுகை இரண்டு ‘ரக்அத்’களைக் கொண்டது. தொழுது முடித்தவுடன், இமாம் சொற்பொழிவு (குத்பா) ஆற்றுவார். இந்தச் சொற்பொழிவு, வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவைப் போன்று நல்லுரைகளையும், அறிவுரைகளையும் கொண்டதாக இருக்கும்.
தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியையும், பெருநாள் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.

(தொடரும்)
‘பித்ரா’ எனப்படும் தானம்
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் தர்மமே ‘ஜகாத்துல் பித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். இது ‘பித்ரா தானம்’ என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய செலவுகள் போக மிச்சமாக கையிருப்பு வைத்திருக்கும் ஒருவர், தனக்காகவும், தம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாகக் கணக்கிட்டு, நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கொடுக்க வேண்டும்.

கோதுமை, அரிசி போன்ற நாம் பயன்படுத்தும் தானியங்களையே ‘பித்ரா’ தானமாகக் கொடுக்க வேண்டும். ஒரு ‘ஸாஉ’ அளவில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாகக் கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும். ஒரு ‘ஸாஉ’ என்பது இன்றைய மதிப்பில் 533 கிராம் ஆகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னதாக இந்த ‘பித்ரா’ தானத்தைக் கண்டிப்பாக வழங்கி விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக அமையும்.

நோன்பாளிகள் செய்த சிறு தவறுகளுக்கு  இந்தத் தர்மம் ஒரு பரிகாரமாக அமையும். மேலும், பெருநாளன்று வறியவர்கள் பசியோடும், பட்டினியோடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமை ஆக்கினார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.