Breaking News
recent

பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்...!


மும்பை நாக்படாவில் 1921-இலிருந்து இயங்கி வந்த அலெக்ஸான்ட்ரா என்கிற திரையரங்கம் இப்போது பள்ளிவாசலாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
எந்தத் திரையரங்கத்தில் ஆபாசத் திரைப்படங்களும் அசிங்கமான காட்சிகளும் வெளியிடப்பட்டு வந்ததோ இன்று அதே இடத்தில் மார்க்கப் போதனை வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்தத் திரையரங்கத்தில் ஒரு காலத்தில் ஆபாசமான ஆங்கிலப் படங்களே வெளியிடப்பட்டு வந்தன. திரையரங்க வளாகத்தில் ஆபாசமான ஓவியங்கள் கண்களை உறுத்துகின்ற விதத்தில் பதாகைகளாய்த் தொங்கவிடப்பட்டிருக்கும்.
 இதனால் இந்தப் பாதை வழியாகச் செல்லாமல் பள்ளிக்கூட பேருந்துகள் சுற்றுப்பாதையில் போக வேண்டிய அவலமும் நிகழ்ந்திருக்கின்றது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வருகின்ற ரஃபீக் தூத்வாலா என்பவர் 2012-இல் 15000 சதுர அடிகளைக் கொண்ட இந்தத் திரையரங்க வளாகத்தை பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கினார். வாங்கிய நாளே இதனை ‘தீனியாத்’ என்கிற தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார்.
செக்குலர் பள்ளிகளில் படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்கு ‘தீனியாத்’ என்கிற பெயரில் பாட நூல்களைத் தயாரிக்கின்ற பணியில் தீனியாத் ஈடுபட்டிருக்கின்றது. மூன்று ஆண்டுகளாய் இந்த நிறுவனம் இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இப்போது வளாகத்தின் முன் பகுதியில் திருத்தங்கள் செய்து ஐவேளை தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஆரவாரங்கள் வந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து இப்போது பாங்கொலி கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த மாற்றம் மகிழ்ச்சியானது. தித்திப்பானது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.