Breaking News
recent

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு சுங்க சலுகைகள் இன்று முதல் அமல்.!


புதிய சுங்க விதிமுறைகள் ஏப்ரல் 1–ந் தேதி (இன்று) அமலுக்கு வருவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, வரிவிதிப்புக்கு உட்பட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கொண்டு வராத பயணிகள், இதற்கான சுங்க பிரகடன படிவத்தை நிரப்பித்தர வேண்டியது இல்லை.

வரி விதிப்புக்கு உட்பட்ட பொருட்களையும், தடை செய்யப்பட்ட பொருட்களையும் கொண்டு வருபவர்கள் மட்டும் படிவத்தை நிரப்பித் தந்தால் போதும். அதுவும், அவர்கள் விமான பயணத்தில் இருக்கும்போதே படிவத்தை நிரப்பலாம். 

இதனால், அவர்கள் விமான நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை.மேலும், 2 லிட்டர் மது, 125 சிகரெட், 50 சுருட்டு, 125 கிராம் புகையிலை ஆகிய பொருட்களை வரியின்றி கொண்டு வரலாம் என்ற சலுகை நீடிக்கும். 

நேபாளம், பூடான், மியான்மர் ஆகியவற்றைத் தவிர, பிற நாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகள் ரொக்கமாக கொண்டு வருவதற்கான உச்சவரம்பு, ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. 

நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள், ரூ.15 ஆயிரம்வரை கொண்டு வரலாம்.இனிமேல், சீனாவில் இருந்து வரும் பயணிகள் வரியின்றி பொருட்களை கொண்டுவர முடியாது. இதுவரை அவர்கள் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வரியின்றி கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். 

வெளிநாட்டினரைப் பொறுத்தவரை, அவர்கள் வரி செலுத்தாமல், ரூ.15 ஆயிரம்வரை கொண்டு வரலாம். அதே சமயத்தில், சாலைமார்க்கமாக வரும் பயணிகள் வரி செலுத்தாமல் எந்த பொருளையும் கொண்டுவர முடியாது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.