Breaking News
recent

பெரம்பலூரில் கடந்த 3 வாரங்களாக 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் தவிப்பு.!


பெரம்பலூரில் 100 டிகிரிக்குமேல் சுட்டெரிக்கும் வெயிலாலும், கோடைமழை சரியாகப் பெய்யாததால் பூமி. கொதிப்படைந்து  வெப்பத்தால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

பெரம்பலூரில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக 100 டிகிரிக்குக் குறைவின்றி சூரியனின் வெப்பம் பூமியைத் தாக்கி வருகிறது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் 102டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடந்தவாரங்களில் மிக அதிகப்பட்சமாக பெரம்பலூரில் 104டிகிரிவரை வெயில் மிகவும் உக்கிரமாகத் தாக்கியுள்ளது.

இதனால் பெரியவர்களும், குழந்தைகளும் சூடு தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் நீர்க்கடுப்பு பாதிப்புகளால் சிகிச்சைக்காக வந்துசெல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படியே உள்ளது. 


நீர் நிலைகளான ஏரி,குளங்கள் வறண்டுவிட்டதால், சனி, ஞாயிறு விடுமுறைகளைக் கூட ஊட்டி, கொடைக்கானல், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட குளிர்ச்சியான சுற்றுலா தலங்களுக்குச் சென்று கழிப்பதற்கே அரசுத்துறை அலுவலர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

கிராமப்புறத்து மக்கள் ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். போதாக்குறையாக இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, நொங்கு, மோர் போன்றவற்றை சாப்பிட்டும் சமாளித்து வருகின்றனர். நகரங்களில் வெளியே நடந்துசெல்வோர் கைகளில் குடையுடன் செல்வதும் வழக்கமாகி விட்டது. 


ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. கல்லூரி, பள்ளி மாணவிகளுக்குத் துப்பட்டாவே துணையாக இருக்கிறது. விபத்திலிருந்து உயிரைக் காப்பதற்காக வலியுறுத்திய போது அணிய மறுத்த ஹெல்மெட் கூட வெயிலுக்குப் பாதுகாப்பாக இருக்குமென்பதால் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அணிந்து செல்கின்றனர்.

வறண்ட பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடும்பியம், நெற்குணம், மாவலிங்கை பகுதிகளில் தொடங்கிய கோடைமழை, அடுத்த நாள் குரும்பலூர், அம்மாப்பாளையம், பாளையம், ஈச்சம்பட்டி பகுதிகளில் பெய்தது. 


தரையின் மேல்பகுதியை மட்டுமே நனைத்துச்சென்ற மழையால் குளிரவேண்டிய பூமியோ மேலும் கொதிப்படைந்துவிட்டது. தலைக்குமேலே சுட்டெரிக்கும் வெயில், தரைக்கு கீழிலிருந்தும் அதன் பிரதிபலிப்பு என தகிக்கும் சூரியனின் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் பொதுமக்கள் தவியாய்த் தவித்துவருகின்றனர்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கும், 3வது வாரத்திற்குள் தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும் என்பதால் விடுமுறைநாட்களை விசுவக்குடி போன்ற நீர்த்தேக்கத்தில் கழிப்பதற்கும், 


நகர்ப்புற மாணவர்கள் மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல்குளத்தில் நீந்தித் திளைக்கவும் திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களும்,விவசாயிகளும் கொட்டித் தீர்க்கும் கோடைமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.