Breaking News
recent

எகிப்தின் 2 தீவுகளை சவூதி அரேபியாவுக்கு, வழங்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!


எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல் மூலம் கலைத்துள்ளனர்.

எகிப்தின் இரு தீவுகளை சவூதி அரேபியாவுக்கு வழங்க தீர்மானித்த ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசியை பதவி விலகக் கோரி, டொக்கி பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க ஏற்கனவே நகரமெங்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மோதல் வெடித்துள்ளது. இதன்போது பலரும் கைதுசெய்யப்பட்டதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியின் தலைவராக இருந்த சிசி, அது தொடக்கம் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். கொடிய சக்திகள் நாட்டை சீர்குலைக்க சதி செய்கின்றன என்று அவர் ஞாயிறன்று எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை மீறி டொக்கி பகுதியில் இருக்கும் மெசாஹா சதுக்கத்திற்கு திங்களன்று சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர். அவர்கள் “வெளியேறு, வெளியேறு” என்றும் “தீவுகள் எகிப்தினுடையது” என்றும் கோஷம் எழுப்பினர்.

இதன்போது ஊடகவியலாளர்கள் உட்பட 133 பேர் வரை கைது செய்யப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல இடங்களிலும் சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

செங்கடல் தீவுகளான டைரான் மற்றும் சனபிர் தீவுகளை சவூதியிடம் கையளிக்க எடுத்த முடிவுக்கே எகிப்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. எனினும் இந்த தீவுகள் சவூதிக்கு சொந்தமானது என்றும் சவூதியின் கோரிக்கைக்கு இணங்க 1950இல் எகிப்து அங்கு இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததை அடுத்தே எகிப்தின் கட்டுப்பாட்டிற்கு வந்ததாகவும் இரு நாட்டு அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.