Breaking News
recent

துபை விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு.!


ரஷியாவில் விபத்துக்கு உள்ளான துபை விமானத்தின் பயண தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய இரு கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டு அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என்று ரஷிய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

துபையிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ரஷியாவின் தென் பகுதியிலுள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் மோதி நொறுங்கியது.

மோசமான வானிலையைத் தொடர்ந்து இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து, பல துண்டுகளாக உடைந்து 1 கி.மீ. பரப்புக்குச் சிதறியது.

இந்த விபத்தில் விமானத்திலிருந்த எவரும் உயிர் பிழைக்கவில்லை. நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 55 பயணிகள், 7 விமான ஊழியர்கள் அதில் இருந்தனர். 

பயணிகளில் கேரளத்தைச் சேர்ந்த இளம் தம்பதியும் அடங்குவர். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ரஷிய போக்குவரத்துத் துறை அமைச்சர் மாக்ஸிம் சொகோலோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஓடுபாதையெங்கும் சிதறியுள்ள விமானத்தின் பாகங்களுக்கிடையே அந்த விமானத்தின் பயண விவரங்களைப் பதிவு செய்த கருப்புப் பெட்டி, விமானிகள் உரையாடலைப் பதிவு செய்த பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

அவற்றை முழுமையாக ஆய்வு செய்வதற்காக தலைநகர் மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்ய ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மாஸ்கோ விரைந்துள்ளனர். 

விபத்துக்கு உள்ளான விமானம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியது. அதில் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன.

விமானம் விழுந்து நொறுங்கியதில் ஓடுபாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் விமானத்தின் பாகங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை ஓடுபாதை சீர் செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குத் தயார் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இழப்பீடு அறிவிப்பு

துபை, மார்ச் 20: விபத்துக்குள்ளான துபை விமானத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா 20,000 டாலர் (சுமார் ரூ.13 லட்சம்) வழங்குவதாக ஃப்ளைதுபை நிறுவனம் அறிவித்தது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

முதல் கட்டமாக அந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்வதாகும். 

உடனடியாக அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை ஃப்ளைதுபை நிறுவனம் அளிக்கும்.

இது தவிர, எங்களது விமான நிறுவன விதிமுறைகளின்படி, இழப்பீடாக ஒவ்வொரு பயணியின் குடும்பத்தினருக்கும் 20,000 டாலர் (சுமார் ரூ.13 லட்சம்) வழங்க முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துபை அரசின் புகழ் பெற்ற எமிரேட்ஸ் ஏர்லைனஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஃப்ளைதுபை 2008-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.


ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகர விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தவர்களுக்கு, அவ்விமான நிலையத்தில் பூங்கொத்துகள் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.