Breaking News
recent

பாத்திரம் கழுவினால் மன அழுத்தம் குறையும்!.!


கடுமையான அலுவலக வேலையை முடித்துவிட்டு டென்ஷனாக வீடு வந்ததும் என்ன செய்வோம்? மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக மியூசிக் ப்ளேயரில் பாட்டு கேட்போம்… இல்லையேல் டி.வி. முன் உட்கார்ந்துவிடுவோம்.

 பாத்திரம் கழுவலாமே என்று யோசித்திருப்போமா? ஆம்… பாத்திரம் கழுவினால் மன அழுத்தம் சீராகும் என்கிற தகவல் ‘மைண்ட் ஃபுல்னஸ்’ பத்திரிகை வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது. 

‘பாத்திரம் கழுவும்போது உபயோகிக்கும் சோப், லிக்யூட் போன்றவற்றின் நறுமணம், அன்றைய சுவையான சமையலின்சுக உணர்வு மற்றும் குழாயிலிருந்து வரும் கதகதப்பான நீர் போன்றவற்றால் ஏற்படும் 

மனநிறைவு பாசிட்டிவான எண்ணங்களை தூண்டுவதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

“கவனம் ஒருநிலைப்படுவதால் ஏற்படும் மனநிறைவு, மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களை விரட்டுகிறது. 

இந்த வழக்கத்தை தொடரும்போது மனக்கவலைகள் நீங்கி நல்ல தூக்கத்தை தருவதால் மறுநாள் புத்துணர்வோடு எழ முடிகிறது” என்று ஃப்ளோரிடா மாகாண பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் குழுவைச் சார்ந்த ஆடம் ஹேன்லி கண்டறிந்துள்ளார். 

இந்த ஆய்வுக்கு இரு குழுவினர் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரு பகுதியினர் பாத்திரம் கழுவுவதை ஒரு வேலையாக மட்டும் எடுத்துச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 

 மற்றொரு குழுவினரை, அவர்கள் எடுத்துக் கொண்ட வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி சந்தோஷத்துடன் செய்யுமாறு  அறிவுறுத்தப்பட்டனர். 

வேலையை முடித்தவுடன் இரு குழுவினரின் மனநிலையை ஆராய்ந்தபோது, முதல் குழுவினரின் மனநிலையில் எந்த மாறுதலும் நிகழவில்லை.

 முழு ஈடுபாட்டோடு வேலையை செய்தவர்களின் மனதில் பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றி, மனம் மகிழ்ச்சி நிலையை அடைந்திருப்பதையும் பிரதிபலித்தது. 

அதோடு, இவர்களது பதற்றம் குறைந்து, மனம் உத்வேகம் அடைந்திருப்பதும் அறியப்பட்டது. மனக்கவலைகள், மனஅழுத்தம் போன்றவை விலகி மனம் லேசாக இருந்ததும் உணரப்பட்டது. 

இதுபோல அன்றாடம் மேற்கொள்ளும் மற்ற வீட்டு வேலைகளான வீட்டை சுத்தம் செய்தல், தோட்டப் பராமரிப்பு போன்றவற்றைச் செய்வதாலும் மன அழுத்தம் குறையுமா என்கிற ரீதியில் ஆராய்ச்சியைத் தொடர திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் ஹேன்லி. இப்போது புரிகிறதா பாத்திரம் தேய்க்கச் சொல்வதன் பின்னணி!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.