Breaking News
recent

வி.களத்தூர் பக்கத்தூரான 113 அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கோதை அவர்களுக்கு மக்காச்சோள உற்பத்தியில் தேசிய சாதனை பிரதமர் மோடி சாதனையாளர் விருது வழங்கினார்.!


இந்திய அளவில் மக்காச் சோள உற்பத்தியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு. பிரதமர் மோடி கிரிஷிகர்மான் என்ற தனிநபர் சாதனையாளர் விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அருகேயுள்ளது இனாம்அகரம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகன். 

இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூங்கோதை (60). இவர்கள் மகன் அறிவழகன். 60 வயதான நிலையிலும் அசராமல் கணவன் விட்டுச் சென்ற விவசாயப் பணிகளை பூங்கோதை தொடர்ந்து செய்து வந்தார். மகன் அறிவழகனும் உதவி வந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோள சாகுபடியில் தொடர்ந்து 7 ஆண்டாக தமிழக அளவில் முதலிடத்தை பெற்று வருகிறது. இங்கு இதற்கு முன் கலெக்டராக இருந்த தரேஸ்அகமது மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்கச்செய்யவும், உற்பத்தியைப் பெருக்கவும் ஒரு ஹெக்டேரில் ஒரு லட்சம் பெருக்கும் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். 


இதன்படி குறைந்தபட்சம் ஒருஹெக்டேர், அதாவது இரண்டரை ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்திடும் விவசாயிக்கு, வேளாண் துறை மூலம் ஆலோசனைகளை வழங்கி, இடுபொருட்கள் இலவசமாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இதே முறையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பூங்கோதையும் தன்னிடமிருந்த ஒரு ஹெக்டேர் நிலத்தில் மக்காச்சோள சாகுபடி செய்தார்.

ஏற்கனவே ஏக்கருக்கு 21முதல் 25 மூட்டைகளை அறுவடை செய்து வந்த பூங்கோதை 2014-15ம் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 51 மூட்டை என்று ஒரு ஹெக்டேரில் 143 மூட்டைகள் அறுவடை செய்துள்ளார். இதன் எடை 14,233 கிலோ. இதை மாவட்ட வேளாண் துறை, புள்ளியியல் துறை இணைந்து நடத்தும் பயிர்அறுவடைப் பரிசோதனைக் குழு ரேண்டம் எண் அடிப்படையில் தேர்வு செய்து, மத்திய, மாநிலஅரசுகளுக்கு அனுப்பியது.


இதனை மத்திய அரசு மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தது. இதில் பூங்கோதையின் மக்காச்சோள உற்பத்தி அளவே அதிகமாக இருப்பதை அறிந்து அவரை மத்தியஅரசின் ‘கிர்ஷி கர்மான்’ எனப்படும் தனிநபர் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்தது. தமிழக அரசும் தேசிய அளவில் தானிய வகையில் அதிகப் படியான உற்பத்திக்கான முதன்மை மாநிலத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி தமிழக தலைமைச் செயலகத்தால் வரவழைக்கப்பட்ட பூங்கோதை, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 19ம்தேதி அவருக்குப் பிரதமர் மோடி கிரிஷிகர்மான் விருதும், ரூ2லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவித்தார். 


மேலும் வேளாண்மையில் புரட்சி செய்த சாதனைப் பெண்மணியான பூங்கோதையை பாராட்டி பிரதமர் மோடி அவரது கால்களைத் தொடுவதுபோல் குனிந்து கைகளை நீட்டி வணங்கி கவுரப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, கணவர் இறந்த பிறகும் தளராமல் விவசாயத்தில் ஈடுபட்டு தேசியஅளவில் சாதனை படைத்த 60 வயது மூதாட்டியான பெண் விவசாயி பூங்கோதையின் சாதனை தமிழக அரசுக்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.