Breaking News
recent

சவுதியில் சாப்பாடு வழங்காமல் சித்ரவதை : தாயிடம் வாலிபர் செல்போனில் கதறல்.!


சவுதியில் சாப்பாடு வழங்காமல் வேலை வாங்கி சித்ரவதை செய்வதாக திருமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர், தனது தாயிடம் செல்போனில் கதறியுள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கலாவதி. 

இவரது கணவர் துரைப்பாண்டி இறந்து விட்டார். இவர்களது மகன் சரவணக்குமார் (28), டிப்ளமோ படித்துள்ளார். திருச்சியை சேர்ந்த புரோக்கர் பாண்டியம்மாள் மூலம், மெக்கானிக் வேலைக்காக சரவணக்குமார் சவுதி அரேபியா சென்றார். இதற்காக பாண்டியம்மாளிடம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.

 மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம், தங்குமிடம், உணவு இலவசம் என பாண்டியம்மாள் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் சவுதியில் அவருக்கு லோடுமேன், தோட்ட வேலை, வாட்ச்மேன் வேலை வழங்கப்பட்டது. முறையாக சாப்பாடு வழங்காமல் தினமும் 18 மணி நேரம் வேலை பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர். தங்க இடமும் வழங்கவில்லை. 


வேலை பார்க்கும் வீடுகளின் வாசலில் தங்கியுள்ளார். 20 நாட்களுக்கு முன் தனது தாயார் கலாவதியிடம் அவர் செல்போனில் பேசியுள்ளார். ’சரியாக சாப்பாடு இல்லாததால் உடல்நலம் குன்றியிருக்கிறது. 

என்னை ஊருக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கலாவதியிடம் மீண்டும் சரவணன், `ஒரு வாரத்திற்கு முன் குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்தேன். தையல் பிரித்த மறுநாளே வேலைக்கு வருமாறு கூறி அடித்து துன்புறுத்துகின்றனர். 


என்னை மீட்க நடவடிக்கை எடுங்கள்’ என கதறியுள்ளார். தனது நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை அனுப்பியுள்ளார். 'எனது மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்கப் போகிறேன்’ என்று கலாவதி தெரிவித்துள்ளார். 

மலேசியாவில் தவிக்கும் மனைவியை மீட்க கணவன் கோரிக்கை: மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி லட்சுமி (44).  இவரை மதுரை பசுமலையைச் சேர்ந்த ஜோதிலட்சுமி மற்றும் ஆனையூரை சேர்ந்த பரமேஸ்வரி ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், வேலைக்காக மலேசியா அனுப்பினர். 

சில தினங்களுக்கு முன்பு மாரியப்பனை செல்போனில் தொடர்பு கொண்ட லட்சுமி, இருவரும் தன்னை ஏமாற்றி டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும், தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 


இது குறித்து மாரியப்பன் பேரையூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.