Breaking News
recent

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை நவம்பரில் தொடக்கம்.!


பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தும் முறையை மாற்றி ஆன்லைன் விசாரணை முறையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்கான முதல் கட்ட பணி நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது. வெளிநாடு செல்ல விரும்புவோர் மத்திய அரசிடம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது,

 விண்ணப்பதாரர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்துவது வழக்கம். இதனால் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதுடன், 

விண்ணப்பிப்பவர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. எனவே இந்த முறையை மாற்றி ஆன் லைன் மூலமாக போலீசார் விசாரணை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கான முதல் கட்டமாக பெங்களுர் நகரில் போலீசார் ஆன் லைன் விசாரணை முறையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட எஸ்பி அல்லது டிசிபி தரத்திலான காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 

தேசிய மக்கள் தொகை ஆவணம், ஆதார், கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்பதாரரின் குற்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 இதற்காக நாடு முழுவதும் சுமார் 14 ஆயிரம் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுகின்றன.

இதுகுறித்து உள்துறை அதிகாரி கூறுகையில், கடந்த காலத்தில் போலீசாரின் விசாரணைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையில் இந்த முறையின் மூலமாக ஒரு வாரத்திற்குள் அந்த பணியை எளிதில் முடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

 போலீசாரின் ஆன் லைன் விசாரணை முறை வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை வேறு சில திட்டங்களுக்கும் நீடிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.