Breaking News
recent

யாக்கூப் மேமனின் விடுதலை குறித்து காந்தியின் பேரன் குடியரசுத் தலைவருக்கு பரபரப்பு மனு.!


யாகூப் மேமனை விடுதலை செய்வதே முன்னாள் குடியர்சுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செயும் உண்மையான அஞ்சலி என்று மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்த தேசமே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

அப்துல் கலாம், ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். 

எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

1997-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மா, மஹாஸ்வேதா தேவி போன்ற சான்றோர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தார். 

அதுவும், அவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட இருந்த முந்தைய நாளில் கருணை செய்தார். இதன் மூலம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை அவர் முழுமையாக பயன்படுத்தி முன் உதாரணம் செய்திருந்தார்.

யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இத்தகைய எதிர்ப்பு அதுவும் இப்பேர்பட்ட நபர்களிடம் இருந்தே வருவது மிகவும் அரிதானது. எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை இந்தியா அழைத்து வந்தபோது அவரிடம் ரகசியமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ அதை மீறுவது ஆகாது.

யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.

மேதகு குடியரசுத் தலைவரே, ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் "இந்திய குடியரசின் தலைவர், அரசியல் சாசனம் அவருக்கும் அளிக்கும் தனியுரிமையால் வழிநடத்தப்படுகிறார். அதே வேளையில் மனசாட்சி கூறும் நன்னெறிகள் அதில் தலையிடுவது என்பதும் அவருக்கு சாத்தியமே" குறிப்பிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.

15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது. அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.

இக்கடிதத்தை அவசரம் கருதி, பொதுநலன் கருதி இப்போது நான் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது கோரிக்கை மனுவை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கோபாலகிருஷ்ண காந்தி
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.