Breaking News
recent

உஷாரய்யா உஷாரு…



அதிகாலையிலே எழுந்து, சமையல் வேலைகளை எல்லாம் பார்த்து, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, நாளிதழை பிரித்து அவள் படிக்கத் தொடங்கியபோது செல்போன் சினுங்கியது.

பார்த்தால் அறிமுகமற்ற எண். 9111 என்று தொடங்கி, 100–ல் முடிவடைந்திருந்தது. மொத்தம் 12 எண்கள். ‘யாராக இருக்கும்?’ என்ற கேள்வியோடு அவள் போனை ‘ஆன்’ செய்தாள். பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசியவன் 

அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘நீங்கள் எத்தனை வருடமாக இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். இந்த பெண், ‘ஐந்து வருடங்களாக..’ என்றாள்.
‘ஐந்து வருடங்களாக நிரந்தரமாக ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பத்து பேரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குகிறோம். அதில் நீங்களும் ஒருவர். 

உங்களுக்கு 2 தங்க நாணயங்கள், 15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன் போன்றவைகளை தபாலில் அனுப்பிவைப்போம். விலாசத்தை கூறுங்கள்’ என்றாள்.

இந்த பெண்ணும் வீட்டு விலாசத்தை சொன்னாள். ‘நாங்கள் உங்களுக்கு அனுப்பும் பரிசின் மதிப்பு 30 ஆயிரம். நீங்கள் பரிசு பொட்டலத்தை 2,500 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று எதிர்முனையில் பேசியவன் சொன்னதும், ‘2,500 ரூபாய் கட்டணுமா? அப்படின்னா என் கணவர்கிட்டே கேட்டுதான் முடிவு பண்ணணும்’ என்றாள்.

‘இந்த சின்ன தொகைக்குகூட கணவர்கிட்டே அனுமதி கேட்கப்போறீங்களா? பரவாயில்லை.. நானே உங்கள் கணவரிடம் பேசி, விவரத்தை சொல்கிறேன். அவரது செல்போன் எண்ணை கூறுங்கள்..’ என்றான். அவளும் கொடுத்துவிட, அடுத்த சில நிமிடங்களில் அவரது எண்ணுக்கு அழைத்தான்.

(மனைவிக்கு 100–ல் முடிந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்ததல்லவா! கணவருக்கு வந்த அழைப்பில் எண் 150–ல் முடிந்திருந்தது)
கணவர் போனில் பேச, அவரிடமும் மேலே சொன்ன அதே ‘பரிசு’ தகவலை சொல்லிவிட்டு,

‘தபால் அலுவலகத்தில் பரிசு பொட்டலத்தை பெறும்போது 2,500 ரூபாய் கட்டுங்கள்’ என்றதும் அவர் உஷாராகி, ‘எனக்கு அந்த பரிசு வேண்டாம்ங்க.. வேற யாருக்காவது கொடுத்திடுங்க..’ 
என்றார். உடனே எதிர்முனையில் போன் கட்டாகிவிட்டது.

அரை மணி நேரம் கழித்து, 200–ல் முடியும் எண்ணில் இருந்து அவருக்கு மீண்டும் போன் வந்தது. அவர் ‘ஹலோ’ என்று சொல்வதற்குள் எதிர்முனையில் இருந்து கெட்டவார்த்தைகளில் அர்ச்சனை விழுந்தது. இவர் அதிர்ந்து போய் பதிலுக்கு என்ன சொல்வது என்று  தெரியாமல் வியர்த்து வழிய, அதற்குள் அவன்     ஒரு ரவுண்ட் இருக்கிற எல்லா கெட்டவார்த்தைகளையும் பயன்   படுத்தி திட்டிவிட்டு, ‘தமிழ்நாட்டில் உள்ள நீங்களெல்லாம் திருந்திட்டீங்களாடா.. 

ஒரு பயகூட இப்போ ஏமாறமாட்டேங்கிறான்..’ என்ற ஆதங்கத்தோடு நிறுத்தியிருக்கிறான்.

மேலே நாம் குறிப்பிட்ட செல்போன் எண்களை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். டெல்லியில் இருந்து சுத்தமான தமிழில் பேசி இப்படி ஏமாற்ற முயற்சிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தங்க நாணய ஆசையில் கையில் இருக்கும் பணத்தை இழந்திடாதீங்க..!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.