Breaking News
recent

மருந்துக் கடை மர்மங்கள்..!!




அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது…’’
“அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ… பெரிய தப்புங்க…’’
‘அந்நியன்’ படத்தின் இந்த வசனம் மருந்துக் கடைகள் விஷயத்தில் அப்படியே பொருந்தும். தகுதி பெற்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதில் நமக்கு இருக்கும் விழிப்புணர்வு, ‘மருந்தியல்’ படித்தவர்தான் நமக்கு மருந்துகள் தருகிறாரா என்பதைக் கவனிப்பதில் இருக்கிறதா? சந்தேகம்தான். 
காரணம், மருந்துக்கடை விற்பனையாளராக நின்று கொண்டிருப்பவர்களில் பலரும் பார்மசிஸ்ட்டுகள் அல்ல… இது ஓர் அதிர்ச்சியான உண்மை. ‘இதிலே என்ன தப்பு’ என ‘அஞ்சு பைசா திருட்டு’ போல, எளிதாகக் கடந்து போகிற மனநிலைக்கு நாமும் வந்துவிட்டோம். 
ஆனால், அதன் விளைவுகள் எத்தனை பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற நிலைமையில் ஒரு நோயாளியை பார்மசிஸ்ட் அல்லாத ஒருவர் கையாள்வது சரியா? தவறா?
‘‘அடிப்படையில் எல்லா மருந்துகளுமே பக்க விளைவுகள் கொண்டவை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே கிடையாது. சரியான அளவில், சரியான முறையில், சரியான கால அளவில் எடுத்துக் கொண்டால்தான் மருந்துகள் நமக்கு உதவி செய்யும். 
இதில் சிறிய குழப்பம் நடந்தாலும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்’’ என்று மருந்துகளின் குணாதிசயத்திலிருந்து இந்தப் பிரச்னையை அணுகுகிறார் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான தவப்பழனி அழகப்பன். பார்மசிஸ்ட் ஏன் அவசியம் என்பதற்கு அவர் தொடர்ந்து அடுக்கும் காரணங்கள் இன்னும் அழுத்தமானவை.
‘‘தலைவலி மாத்திரையாக இருந்தாலும் கூட, அதை எத்தனை நாளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும், எத்தனை மணிநேர இடைவெளி தேவை, ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டும் தலைவலி சரியாகவில்லை என்பதற்காக இன்னொன்று சாப்பிடலாமா என்பது உள்பட பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. 
இத்தனை நாளுக்கு மேல் ஒரு மருந்தைப் பயன்படுத்தக் கூடாது, குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அந்த மருந்தை நிறுத்திவிட வேண்டும் போன்ற விஷயங்களும் உள்ளன. பார்மசிஸ்ட் அல்லாத ஒருவர் மருந்துக்கடையில் விற்பனையாளராக இருந்தால் இந்த விஷயங்களை எல்லாம் கவனிக்க வாய்ப்பில்லை.
மருந்துக் கடைகளில் மருந்து வாங்குபவர்களில் விவரம் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே மருந்தின் பெயர், காலாவதியாகும் தேதி, மருந்தின் அளவு(Dose) போன்றவற்றை சரி பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். 
பெரும்பாலானோர் மருந்துக் கடைக்காரர்கள் கொடுத்ததை அப்படியே வாங்கிப் பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். குறைந்தபட்சம், மருந்துகள் வாங்கியவுடன் மீண்டும் மருத்துவரிடம் சென்று மருந்துகளை சரிபார்த்துக் கொள்கிறவர்களும் குறைவுதான். 
மருந்துகளில் மருந்து வகையின் பெயர் (Generic name) , நிறுவனத்தின் பெயர் (Brand name) ஆகிய வித்தியாசங்கள் உள்ளன. வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் பாரசிட்டமால் என்பது மருந்து வகையின் பெயர்.
இந்த பாரசிட்டமாலையே பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சாதாரணமாக மளிகைக் கடைகளிலேயே குறிப்பிட்ட பிராண்ட் பொருளைக் கேட்டு வாங்காவிட்டால் அவர்களாகவே வேறு ஏதாவது பொருளை கொடுப்பார்கள். 
இந்த நடைமுறை மருந்துக் கடைகளிலும் உண்டு. மருத்துவர் எழுதியிருக்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து இல்லாவிட்டால், அதே ஜெனரிக்கில் வேறு ஒரு நிறுவனத்தின் மருந்தை எடுத்துக் கொடுப்பதும் நடக்கும். நம் நாட்டின் இன்னொரு பெரிய பிரச்னை சுய மருத்துவம். 
ஒரு மருந்தின் பெயரையோ, மாத்திரையின் பெயரையோ தெரிந்து கொண்டு தானாகவே மருந்துக்கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது ஆபத்து.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்துச் சீட்டு இல்லாமல் எந்தக் காரணம் கொண்டும் மருந்துக் கடைக்காரர்கள் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, ஆன்டிபயாடிக் மருந்துகளின் பெயரைச் சொல்லி மக்களே கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். 
தகுதி பெற்ற பார்மசிஸ்ட்டாக இருந்தால் அந்த மருந்தைக் கொடுக்க மாட்டார். மருந்தியல் பற்றித் தெரியாதவர்கள் விற்பனையாளராக இருக்கும்போது, மருத்துவரின் கையெழுத்து புரியாமல் மாற்றிக் கொடுக்கும் அபாயமும் உண்டே? மருந்தின் அளவும் மாற வாய்ப்பு உண்டு. மருத்துவரின் கையெழுத்துப் புரியாத பட்சத்தில் 
மருந்துச் சீட்டில் இருக்கும் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டு, ‘இந்த நோயாளிக்கு இந்த மருந்துதான் எழுதப்பட்டிருக்கிறதா’ என்று சந்தேகத்தைத் தீர்த்த பிறகு கொடுக்கும் பழக்கமும் நம்மிடம் இல்லை.
இப்படி மருந்தியலாளர் இல்லாததால் ஏற்படும் குளறுபடிகளால் உறுப்புகள் செயலிழப்பது, உயிரிழப்பு ஏற்படுவது என என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 
புரியாத வகையில் மருந்துச் சீட்டு எழுதுகிற மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், நோயாளிகள் என இந்த மூன்று தரப்புக்கும் இந்தப் பயம் இருக்க வேண்டும். மருந்துகள் பற்றிய அறிவு விற்பனையாளருக்கு அவசியம் என்பதைப் போலவே, நோயாளி பற்றிய ஒரு தெளிவும் விற்பனையாளருக்கு வேண்டும். 
அரசுத் தரப்பில் இன்னும் அதிகமான மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவை. கடைகளுக்கு உரிமம் வழங்குவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’’ என்கிறார் தவப்பழனி அழகப்பன்.
மருந்துக் கடைகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று தமிழ்நாடு பார்மஸி கவுன்சில் பதிவாளரான இளங்கோவிடம் பேசினோம்… ‘‘முன்பு இந்தப் பிரச்னை இருந்தது உண்மைதான். 
இப்போது பெரிய நிறுவனங்களும் மருத்துவமனைகளுமே மருந்துக் கடைகளை நகரம் முழுவதும் வைத்திருக்கிறார்கள். அந்தக் கடைகளில் மருந்தியலாளர்கள்தான் பெரும்பாலும் பணியில் இருக்கிறார்கள். பல இடங்களில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டிலேயே மருந்துக் கடைகள் நடந்து வருகின்றன. 
சில இடங்களில் மருந்தியலாளர்கள் இல்லாமல் கடைகள் நடப்பது போல தெரியலாம். ஆனால், அருகில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வருகிற குறிப்பிட்ட நேரத்தில் மருந்தியலாளர்கள் கடைக்கு வந்துவிடுவார்கள்.
அதனால் தவறு நடக்க வாய்ப்பு குறைவுதான். மருந்துக் கடைகளில் விற்பனையாளர்களை தவிர்க்க முடியாது. அந்த விற்பனையாளர்களும் மருந்தியலாளர்களின் மேற்பார்வையில் தான் மருந்து கொடுக்கிறார்கள். 
சாதாரணமாக காய்ச்சல், தலைவலிக்கு மாத்திரைகள் கொடுப்பதற்கு மருந்தியலாளர்கள் அவசியம் இல்லை. ஆனால், Prescribed drugs வகை மருந்துகளை மருந்துச் சீட்டு இல்லாமல் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் அது தவறு.
 மருந்தியலாளர் இல்லாதபோது விற்பனையாளர் தானாகவே முடிவெடுத்து மருந்துகள் கொடுப்பதும் ஆபத்துக்கு வழிவகுக்கலாம்’’ என்கிறார்.பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நுகர்வோர் காவலர் தேசிகனிடம் கேட்டோம்.‘‘அரசு அதிகாரி ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு மனைவியுடன் வந்திருந்தார்.
வயிற்றுப்போக்கு மருந்துக்குப் பதிலாக நீரிழிவுக்கான மருந்தை ஒரு கடையில் கொடுத்துவிட்டார்கள். இதனால் அந்த அம்மாவுக்கு சர்க்கரை அளவு குறைந்து மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். 
பிறகு, நாங்கள் தலையிட்டு அந்தப் பிரச்னையை தீர்த்து வைத்தோம். இதுபோல பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. பார்மஸி முடித்த ஒருவரது சான்றிதழை வைத்து 5 மருந்துக் கடைகளாவது இயங்குவது உலகம் அறிந்த ரகசியமாக இருக்கிறது. 
பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற விரும்பினாலோ, சம்பந்தப்பட்ட மருந்துக் கடையின் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினாலோ நுகர்வோர் அமைப்பை தயங்காமல் அணுகலாம்.
அதற்கு மருந்துச் சீட்டு, வாங்கிய மருந்துகள், மருந்துக் கடையின் பில் ஆகியவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மருந்துக் கடைக்கு ஒரு கடிதம் எழுதி நகல்களை இணைத்து அனுப்பிவிட்டு, நுகர்வோர் அமைப்புக்கும் ஒரு பிரதி அனுப்ப வேண்டும். 
உண்மையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை நகல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என்று நிவாரண வழிகள் சொல்கிறார் தேசிகன். பாதிக்கப்பட்டு நிவாரணம் தேடுவதைவிட, வரும் முன்னர் காப்பதே சிறந்தது என்பதால், மருந்துக் கடைகள் விஷயத்தில் நாம் இன்னும் எச்சரிக்கையுடன் இருப்பதே எல்லாவிதத்திலும் நல்லது!
அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? அப்துல் காதர் (மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர்)
‘‘தமிழ்நாடு அளவில் 32 மாவட்டங்களும் 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மருந்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், அவருக்குக் கீழ் மருந்தக ஆய்வாளர்கள் என்று மொத்தம் 146 அதிகாரிகள் இருக்கிறார்கள். 
குறிப்பிட்ட கால அளவில் மருந்துக் கடைகளை ஆய்வு செய்து, மருந்துகளின் மாதிரிகளையும் சேகரித்து வருகிறோம். மருந்துக் கடைகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வழக்குத் தொடர்வது, அபராதம், சிறை தண்டனை என்று பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். 
இதுபோல், வருடத்துக்கு 300 முதல் 400 வழக்குகள் பதிவாகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகம். இந்தப் பிரச்னையில் பொதுமக்களுக்கும் பொறுப்பு இருப்பதால் மருந்துகள் வாங்கும்போது அதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தவறுகள் இருப்பது தெரிந்தால் எங்களிடம் புகார் அளிக்கலாம்…’’
பில் ஏன் அவசியம்?
2012ல் மும்பையை சேர்ந்த சேத்தன் டிசோஸா நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். ‘மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு மருந்துக் கடையில் மருந்துகள் வாங்கி சாப்பிட்டேன். 
எனது உடல்நிலை முன்பைவிட மோசமானது. மருந்துகளை தற்செயலாக கவனித்தபோதுதான் அவை காலாவதியான மருந்துகள் என்பது தெரிய வந்தது. அதனால் சம்பந்தப்பட்ட மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மருந்துக் கடை சேவை குறைபாட்டுடன் செயல்பட்டு வந்ததை உறுதிப்படுத்தியது. மருந்துக் கடையின் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதத்துக்குள் நஷ்ட ஈடாக 25 ஆயிரம் வழங்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. 
இந்த வழக்கில் தன் பக்கம் இருந்த நியாயத்தை நிரூபிக்க ‘பில்’ அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அதனால் மருந்துகள் வாங்கும்போது பில் வாங்க மறக்காதீர்கள்!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.