Breaking News
recent

வெளிநாட்டு இந்தியருக்கு இன்டர்நெட் ஓட்டு வசதி:மேலும் பல சலுகைகள் வழங்க தேர்தல் கமிஷன் தயார்!!



வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பதில் ஓட்டு, இ – பேலட் எனப்படும் இணையதள ஓட்டு வசதி போன்றவற்றை வழங்கத் தயார் என தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல்களின் போது வெளிநாட்டு துாதரகங்களில், இந்தியர்கள் ஓட்டளிக்க வசதி ஏற்படுத்த முடியாது என தெரிவித்து உள்ளது.
சட்ட பிரிவுகள்:’வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியாத வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில பிரிவுகள் உள்ளன; அவற்றை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து பதிலளிக்குமாறு, தேர்தல் கமிஷன், வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறைக்கு உத்தரவிட்டது. அதன் படி, துணை தேர்தல் கமிஷனர் ஒருவர், சட்டத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளார்.
அதில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பதில் ஓட்டு, இணையதள ஓட்டு வசதி போன்றவற்றை வழங்கலாம் என, தெரிவித்துள்ளார். எனினும், இவற்றை உடனடியாக அமல்படுத்த முடியாது; பார்லிமென்டில் சட்டம் இயற்றி, தேவையான சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து தான் நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களின் போது, வெளிநாட்டு துாதரகங்களில் இந்தியர்கள் ஓட்டளிக்க வசதி ஏற்படுத்தித் தர முடியாது என, திட்டவட்டமாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர், தமிழகத்தை சேர்ந்த, வி.எஸ்.சம்பத் கூறியதாவது:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க, இப்போதிருக்கும் சட்ட திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். பதில் ஓட்டு, எலக்ட்ரானிக் முறையில் ஓட்டுச் சீட்டுகளை அனுப்பி வைத்து, அதை தபால் மூலம் பெறுவது, அல்லது தேர்தல் கமிஷனின் இணையதள பக்கத்தில், எலக்ட்ரானிக் முறையில் ஓட்டுப்பதிவு என, பல வசதிகளை வழங்கலாம்.
எனினும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்கள் முதலில் மேற்கொள்ள வேண்டும். வெளி நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களில், இந்தியர் கள் ஓட்டளிக்க வசதி ஏற்படுத்த முடியாது. ஏனெனில், இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகளில் ஜனநாயகம் கிடையாது. ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலை அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படும்.
மக்கள் தொகை:அது போல, சில நாடுகளில், அந்நாட்டு மக்கள்தொகையை விட, இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், துாதரகங்களால் அவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட வசதி செய்ய முடியுமா… என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இப்போதைக்கு துாதரகங்களில் ஓட்டளிக்க வசதி ஏற்படுத்த முடியாது.இவ்வாறு, தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார்.
பதில் ஓட்டு என்பது, ஓட்டுரிமை உள்ள ஒருவர் ஓட்டளிக்க முடியாத நிலையில், அவருக்கு பதில், மற்றொருவர் ஓட்டளிக்கலாம். இந்த சலுகை, ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.