Breaking News
recent

இலவச இன்டர்நெட் கொடுங்கள்.....



பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க், உலகில் உள்ள அனைவருக்கும் இலவச இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பன்னாட்டளவில் வைத்துள்ளார். 
எப்படி அவசிய சேவை (நெருப்பு, காவல், பேரிடர், ஆம்புலன்ஸ் போன்றவை) களை, கட்டணமின்றி, இலவசமாக தொலைபேசியில் அழைக்கிறோமோ, அதே போல இணைய இணைப்பும் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 
வால் ஸ்ட்ரீட் இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இதற்கான திட்டத்தினையும் தந்துள்ளார். இந்த இதழ் சார்ந்து, இவர் மற்ற சில நிறுவனங்களுடன் இணைந்து Internet.org என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி உள்ளார். 
இதில் பேஸ்புக், ஆப்பரா பிரவுசர் நிறுவனம் மற்றும் தகவல் தொழில் நுட்பப்பிரிவில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இந்தக் குழுவில் உள்ளோர், உலகில் உள்ள அனைவருக்கும் இலவச இணைய சேவை கிடைக்க வேண்டும் 
என்பதனைத் தங்கள் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளனர். தற்போது, உலக அளவில் மூன்றில் ஒரு பங்கினர் தான் இணைய இணைப்பு சேவையினைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். அனைவருக்கும் இணைய சேவை இலவசமாகத் தரப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான முயற்சிகள் எடுக்க ஒத்துழைப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இணைய இணைப்பு இல்லாததால், அவர்களின் அறிவுத் திறனையும், கற்பனைத் திறனையும் இந்த உலகம் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. 
இது உலக மக்களுக்கு மாபெரும் இழப்பாகும். எனவே தான் இந்த நோக்கத்துடன் செயல்படுகிறோம் என இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களே, அதிக அளவில் இணைய இணைப்பினை மக்களுக்குக் கொண்டு செல்வதில் சிறப்பான பங்கினை ஆற்ற முடியும் என ஸக்கர் பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். 
ஏனென்றால், தரை வழி இணைய இணைப்பினை வழங்குவதற்கான கட்டுமானச் செலவு, வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சுமையாக இருக்கும். அதற்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் வழி இணைய இணைப்பிற்கு அதிகம் செலவாகாது. 
மேலும், ஏற்கனவே, உலகின் 90 சதவீத மக்கள், ஏதேனும் ஒரு வகையில், மொபைல் போன் நெட்வொர்க்கில் உள்ளனர். இதே நெட்வொர்க்கினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை எளிதாக வழங்க முடியும். 

ஆனால், இந்த வகை இணைப்பில், டேட்டா பரிமாற்றத்திற்கான செலவு தான் குறிப்பிட்த்தக்க வகையில் அதிகமாக இருக்கும். எடுத்துக் காட்டாக, அமெரிக்கா போன்ற நாட்டில், ஒருவர் ஐ போன் ஒன்றை வாங்கி, இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தினால், இரண்டு ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட செலவு தொகையில் 75% பணம் டேட்டா பரிமாற்றத்திற்காகவே செலவிட்டதாகவே இருக்கும்.

இந்தச் சூழலை எதிர்த்து நாம் போராட வேண்டியதுள்ளது எனக் கூறுகிறார், ஸக்கர்பெர்க். இதற்கு மொபைல் போன் சேவை வழங்குவோரின் மனப்பாங்கு மாற வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
 எப்படி அவசர சேவைகளுக்கு இலவச தொலைபேசி இணைப்பு தரப்படுகிறதோ, அதே போல எளிய மக்களுக்கு இலவச இணையத் தொடர்பு கிடைக்க வேண்டும். குறைந்த பட்சம், ஓர் அடிப்படை இணைய வசதி தரப்பட வேண்டும் என்கிறார், ஸக்கர்பெர்க். 
இது போன்ற அடிப்படை இணைய வசதியை இலவசமாகப் பயன்படுத்தும் மக்கள், நாளடைவில், கட்டணம் செலுத்திப் பெற முன்வருவார்கள் என்று இவர் எதிர்பார்க்கிறார். இவரின் எண்ணப்பாங்குக்கு ஏற்ப இணைய சேவை நிறுவனங்கள் முன்வருமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
 முன்வருவார்களா? அல்லது ஸக்கர்பெர்க் தன் விளம்பர வருமானத்தை உயர்த்திக் கொள்ள இது போல கருத்துக்களை முன் வைக்கிறார் என்று எண்ணுவார்களா? காத்திருந்து பார்க்கலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.